Home நாடு “மலேசிய தினம் 2023 – மலேசியர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பொருள் பொதிந்த...

“மலேசிய தினம் 2023 – மலேசியர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பொருள் பொதிந்த தினம்” விக்னேஸ்வரன்

467
0
SHARE
Ad

மஇகா தேசியத் தலைவர்
டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர்
ச. விக்னேஸ்வரன் அவர்களின் மலேசிய தின வாழ்த்துச் செய்தி

“மலேசிய தினம் 2023 – மலேசியர்களை அடுத்து நிலைக்கு அழைத்துச் செல்லும் ஒரு பொருள் பொதிந்த தினமாகும்”

இந்த 2023 ஆண்டின் தேசிய தினத்தின் கருப் பொருளானது மலேசிய மதானி என்பதாகும். அதாவது ஒற்றுமையில் உறுதி, நம்பிக்கையை நிறைவேற்றுதல் என்பதாகும். அண்மையில் அதற்கான சின்னம் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்துமே, மலேசியாவின் நடப்பு அரசாங்கத்திற்கு ஓர் உத்வேகத்தை அளித்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டின் மலேசிய தினத்தை ஒரு பொருள் பொதிந்த தினமாக மலேசிய மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

நாம் எந்தளவுக்கு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோமோ, அந்த அளவுக்கு மலேசிய தினத்தையும் நாம் கொண்டாடுகிறோம். ஒரு நாட்டு மக்களுக்கு தேவையானது முழு சுதந்திரமாகும். அந்த சுதந்திரத்தின் வழியேதான் மக்கள் அவரவர்களின் தகுதிகளுக்கு ஏற்றவாறு முன்னேற்றம் காணுகின்றனர். இனம், மொழி, மதம் ஆகியவற்றினையெல்லாம் கடந்து, ஓர் ஒற்றுமையான அரசாங்கத்தை உருவாக்கி, அதன்வழி மலேசிய நாட்டை உலக அரங்கில் நிலை நிறுத்த வேண்டும் என்ற இலட்சிய இலக்கில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் நமது பிரதமர் மாண்புமிகு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் பணியினை நாம் இங்கு பாராட்டாமல் இருக்க முடியாது.

குறிப்பாக, கடந்த காலங்களில் இந்தியர்கள் எதிர்நோக்கி வந்த நகைக்கடை, ஜவுளிக் கடை மற்றும் முடிதிருத்தகக் கடை ஆகியவற்றில் தொழிலாளர்களின் பற்றாக் குறை காரணமாக, அவர்களின் வாழ்வாதாரம் நிலையற்றதாக இருந்தது. எத்தனையோ கடுமையான போராட்டங்கள் – விவாதங்களுக்குப் பின்னர், தற்போது அதற்கான வழி திறக்கப்பட்டுள்ளதற்கு இந்த வேளையில் நமது பிரதமர் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், சிறந்த தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு குறிப்பாக, மருத்துவத் துறையில் விண்ணப்பித்தவர்களுக்கு பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் வழங்கும் பிரச்சினைகள் குறித்து, தற்போது பல்வேறு நிலையில் விவாதிக்கப்பட்டு வந்தாலும்கூட, இந்தியச் சமுதாயத்திற்கான உரிமையை பெறுவதில் மஇகா என்றுமே போராடும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வருகிறது.

சிறந்த கல்வியைப் பெறும் சமுதாயம் மட்டுமே பொருளாதாரத் துறையில் முன்னேற முடியும் என்ற கருத்து எல்லாக் காலங்களிலும் மஇகா வலியுறுத்தி வருகிறது. இந்தக் கல்விக்கானப் போராட்டத்தில் வெற்றிப் பெறுவதில் மஇகா என்றுமே பின்வாங்காது.

பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், கட்சி தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டிருப்பதால்தான், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி புதிய மஇகா கட்டட வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மிகச் சிறப்பான – ஒரு முக்கிய நிகழ்வாக நடைபெற்றது. மஇகா உறுப்பினர்களின் உத்வேகத்தால், இந்த வளாகத்தின் கட்டுமானம் விரைவில் நிறைவேறும் என்பதனை இங்கு கூறிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

இந்தியச் சமுதாயத்தின் நலன்களுக்காகவும், பாதுகாப்புக்காகவும் மஇகா என்றுமே ஓர் அரணாக இருந்து சேவையாற்றும் என்றும் நான் உறுதி கூறுகிறேன்.