Home சமயம் 10ஆம் தேதி தை அமாவாசை- புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு

10ஆம் தேதி தை அமாவாசை- புண்ணியங்கள் தரும் முன்னோர் வழிபாடு

733
0
SHARE
Ad

Tamil-Daily-News-Paper_31661188603

பிப்ரவரி 9 – தை அமாவாசை எப்பொழுது என்று பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். வரும் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையே தை அமாவாசை என்று மலேசிய இந்து சங்கம் தெரிவித்துள்ளது.  சனிக்கிழமையா? ஞாயிற்றுக்கிழமையா? என்று பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். தை அமாவாசையை ஞாயிற்றுக்கிழமை செய்வதே சிறப்பு என்று சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.மோகன்ஷான் கூறியுள்ளார்.

தை அமாவாசை குறித்த சில சிறப்பு அம்சங்கள்:-

#TamilSchoolmychoice

திதிகளிலே மிகவும் பிரசித்தி பெற்றது, மகத்துவம் நிறைந்தது அமாவாசை. இந்த நாளில் இறந்த முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம்.

கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இறந்தவர்களை நினைத்து வழிபடுவதால் அவர்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் என்றும், அவர்களின் பரிபூரண ஆசிர்வாதம் சந்ததியினருக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற வழிபாடுகளால், மறைந்துவிட்ட முன்னோரை கண்ணால் காணும் பாக்யமும் கிடைக்கும்.

பொதுவாக அமாவாசையன்று புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள். இஷ்ட தெய்வ ஆலயங்களில் வழிபாடு செய்து இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வார்கள். மறைந்த தாய், தந்தையர் படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள்.

சில முக்கிய ஊர்களில் திதி கொடுத்து வழிபடுவதை விசேஷமாக கருதுகிறார்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தகுளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி ஆகிய தலங்கள் முக்கியமானவை. வடநாட்டில் காசி, கயா, பத்ரிநாத், அலகாபாத் திரிவேணி சங்கமம் மற்றும் கேரளாவில் ஐவர் மடம் பிரசித்தி பெற்றது.

அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குவது சிறப்பு. பிதுர்க்காரகனாகிய சூரியன் நாம் செய்யும் தான தருமங்களுக்கான பலன்களை பிதுர் தேவதைகளிடம் வழங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். பிதுர் வழிபாட்டில் காகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, பசு மாட்டுக்கும், காகத்துக்கும் முதலில் உணவளிப்பது மிகவும் சிறப்பானதும், புண்ணியம் சேர்ப்பதும் ஆகும்.