கோலாலம்பூர், செப் 26 – குற்றத் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தம் மலேசிய அரசியலமைபுக்கு முரணானது என்று ஜசெக தலைவர் கர்பால் சிங் கூறியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் வாசிப்புக்கு வந்த குற்றத் தடுப்பு சட்டத்தில் செய்யபப்ட்ட மாற்றங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த கர்பால் சிங், “நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் குறித்து பதிலளித்தாலும், இது அரசியலமைக்கு ஏற்ற ஒன்று அல்ல” என்று குறிப்பிட்டார்.
மேலும்,“அமைச்சர் ஒருவர் தனிப்பட்ட முறையில் செய்ய நினைக்கும் ஒரு திருத்தத்தை மூவர் அடங்கிய வாரியம் முடிவு செய்கிறது அவ்வளவு தான் அதில் உள்ள வித்தியாசம். அச்சட்டத்தில் திருத்தங்கள் செய்து உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது தான் அவர்களின் நோக்கம்” என்று கர்பால் கூறினார்.
இச்சட்ட திருத்தம் குறித்து நேற்று உள்துறை அமைச்சர் சாஹிட் வெளியிட்ட அறிக்கையில்,“இது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை திரும்ப கொண்டு வருவது போன்ற திருத்தம் இல்லை. இது மிகக் கடுமையான சட்டமும் இல்லை” என்று தெரிவித்தார்.
எனினும் அச்சட்டதிருத்தத்தில், சந்தேகப்படுபவர்களை இரண்டு ஆண்டுகள் விசாரணை இன்றி தடுத்து வைப்பது குறித்த கோரிக்கை பற்றி சாஹிட் விவரிக்க மறுத்துவிட்டார்.
ஏற்கனவே விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைக்கும் அதிகாரங்கள் கொண்ட சட்டங்களான அவசரகால சட்டம் (Emergency Ordinance) மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டம் (Internal Security Act) ஆகியவற்றுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள் காரணமாக அவை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.