சென்னை,அக் 16- இந்தியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவான கோவா திரைப்பட விழாவிற்கு ராமின், ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகி இருக்கிறது. இந்த விழாவுக்கு தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ்ப்படம் இதுவாகும். ‘கற்றது தமிழ்’ ராம், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் ‘தங்கமீன்கள்’.
ராமே இப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இயக்குநர் கெளதம் மேனன் இப்படத்தை தயாரித்தார். அப்பா-மகளுக்கு இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் உருவாகி இருந்தது. பல்வேறு நிதிநெருக்கடிக்கு பிறகு சமீபத்தில் தான் இப்படம் வெளியானது. வசூல்ரீதியாக இப்படம் பெரும் வெற்றி பெறாவிட்டாலும் அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய்… பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கோவாவில் 44வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்களில் இருந்து 25 படங்கள் தேர்வாகி இருக்கிறது. அதில் தமிழில் இருந்து ராம் இயக்கிய தங்கமீன்கள் படம் தேர்வாகி இருக்கிறது. சுமார் 10பேர் கொண்ட நடுவர்கள் 21நாட்களாக பல்வேறு படங்களை பார்த்து தங்கமீன்கள் உள்ளிட்ட 25 படங்களை தேர்வு செய்துள்ளனர்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழில் இருந்து தங்கமீன்கள் படம் தேர்வாகி இருப்பது தங்கமீன்கள் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் ராம், சமீபகாலத்தில் சர்வதேச அளவில் தயாரான குழந்தைகள் படங்களில் எனது படமும் திரையிட தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.