கோலாலம்பூர், அக் 16 – ஆஸ்திரேலியா நாட்டில் அரசாங்கத்தின் உதவியோடு படிக்கும் மலேசிய மாணவர்கள், கடந்த சனிக்கிழமை அந்நாட்டில் நடைபெற்ற அன்வார் கூட்டத்திற்கு செல்லக்கூடாது என்று அங்குள்ள பொதுச் சேவைத் துறை ( Public Services Department) எச்சரிக்கை விடுத்தது உண்மையா என்று பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று காலை பிகேஆர் தொடர்பு இயக்குநர் பஹாமி பட்சில் விடுத்த அறிக்கையில், “ஏடிலேய்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அன்வாரின் கூட்டத்திற்கு பொதுச் சேவைத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று மாணவர் ஆலோசகர் எச்சரிக்கை கடிதம் அனுப்பியது உண்மையா” என்று கேள்வி எழுப்பினார்.
அந்த எச்சரிக்கை கடிதம் பேஸ்புக் மூலம் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது என்றும், அதில் நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் பஹாமி பட்சில் தெரிவித்தார்.
“இது போன்ற எச்சரிக்கை கடிதம் விடுக்கப்பட்டது உண்மையா? அது உண்மை என்றால் அது குறித்து பொதுச் சேவைத் துறையும், நியூ சவுத் வேல்ஸில் உள்ள மலேசியத் தூதரகமும் விளக்கமளிக்க வேண்டும். அது போன்ற கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? பொதுச் சேவைத் துறையின் செயல்முறைகளில் அதுவும் ஒன்றா?” என்று பஹாமி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.