Home தொழில் நுட்பம் விமானத்தில் செல்பேசிகளைப் பயன்படுத்த 61 சதவிகிதப் பயணிகள் விருப்பம் – ஆய்வில் தகவல்

விமானத்தில் செல்பேசிகளைப் பயன்படுத்த 61 சதவிகிதப் பயணிகள் விருப்பம் – ஆய்வில் தகவல்

608
0
SHARE
Ad

flightsகோலாலம்பூர், அக் 17 – விமானத்தில் பயணம் செய்யும் போது செல்பேசிகளைப் பயன்படுத்தலாம் என்றால் பயன்படுத்துவீர்களா? என்ற கேள்விக்கு 61 சதவிகித சர்வதேச விமானப் பயணிகள் ஆமாம் என்று பதிலளித்துள்ளனர்.

இந்த ஆய்வை ‘ஸ்கை ஸ்கேனர்’ என்ற நிறுவனம் சமீபத்தில் நடத்தியுள்ளது.

தற்போது அனைத்து விமானங்களிலும் புறப்படுவதற்கு முன்னரும், தரயிறங்குவதற்கு முன்னரும் பயணிகள் தங்களது செல்பேசி, மடிக்கணினி, திறன்பேசிகள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது நடைமுறையில் உள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும், பலர் அதை கவனத்தில் கொள்ளாமல் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே தங்களது மின்னணு சாதனங்களை உபயோகிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் (US Federal Aviation Authority- FAA) தங்களுடைய கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ள முன்வந்துள்ளது.

விமானத்தில் செல்பேசிகளைப் பயன்படுத்துவதால் எந்தவித பாதகமும் இல்லை என்ற முடிவுக்கு அந்த ஆணையம் வந்துள்ளது.

தற்போது பிரிட்டிஷ் ஏர்லயன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லயன்ஸ் போன்ற உயர் ரக விமானங்களில் பயணிக்களுக்கு கூடுதல் கட்டணத்தோடு இணைய வசதியை (WIFI) தரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவ்வசதியை விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னரும், தரையிறங்க சில நிமிடங்களுக்கு முன்னர் வரையிலும் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இது போன்று இன்னும் பல விமான சேவை நிறுவனங்களில் இந்த இணைய வசதி விரைவில் கொடுக்கப்படலாம். ஆனால்  ‘ஸ்கை ஸ்கேனர்’ நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, 75 சதவிகித பயணிகள் கட்டணம் செலுத்தி இணைய வசதியைப் பெறுவதை விரும்பவில்லை.

இணைய வசதியை வழங்க விமான நிறுவனங்கள் 1 மணி நேரத்திற்கு 47.46 ரிங்கிட்டும் ( US$15), ஒரு நாளைக்கு 94.78 ரிங்கிட்டும் (US$30) கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

அக்டோபர் முதல் வாரத்தில் சுமார் 1000 பயணிகளிடம் மேற்கண்ட ஆய்வை ‘ஸ்கை ஸ்கேனர்’ நிறுவனம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.