ஜார்ஜ் டவுன், அக் 18 – தன் மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் எந்த வகையிலும், வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் அம்னோ தேர்தலில் தான் போட்டியிடும் பதவியை பாதிக்காது என்று டத்தோஸ்ரீ முகமது அலி முகமது ருஷ்தாம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
அம்னோ உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அலி ருஷ்தாம், அந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது என்றும், தான் காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கத் தயார் என்றும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“நான் அந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த ஒரு கவலையும் படவில்லை காரணம் அவை என்னை எந்த விதத்திலும் பாதிக்காது” என்றும் அலி ருஷ்தாம் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பியூஎன்பி விழாவில் பேசிய (Perbadanan Usahawan Nasional Bhd – PUNB) அலி ருஷ்தாம், சீனர்களின் தொழில் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கோட்டா லக்ஷ்சமணா சட்டமன்ற உறுப்பினர் லாய் குயென் பான் காவல்துறையில் புகாரைப் பதிவு செய்தார்.
அப்புகார் குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“நான் சீனர்களை பற்றி அவதூறு கூறவில்லை”
இதனிடையே தான் சீனர்கள் குறித்து எந்த ஒரு தவறான கருத்தையும் கூறவில்லை என்றும், சிலர் தனது உரையை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அலி ருஷ்தாம் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இது குறித்து அலி ருஷ்தாம் மேலும் கூறுகையில், “இஸ்லாம் சமயத்தினர் செய்யமுடியாத பல தொழில்களை சீன சமூகத்தினர் செய்ய முடிகிறது. உதாரணமாக சூதாட்டம், லாட்டரி, வட்டிக்கு கடன் கொடுப்பது போன்ற தொழில்கள் இஸ்லாமுக்கு ஆகாதது. இதை செய்ய இஸ்லாம் சமூகத்தினருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அது போன்ற தொழில்களை செய்வதில்லை. இதைக் கூறியதற்காக என் மீது அவதூறு மற்றும் இனவாத குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள்.” என்று அலி ருஷ்தாம் விளக்கமளித்துள்ளார்.