Home நாடு இன்று முதல் “விண்மீன்” – மலேசிய தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சகாப்தம்!

இன்று முதல் “விண்மீன்” – மலேசிய தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சகாப்தம்!

1527
0
SHARE
Ad

Vinmeen-Featureஅக்டோபர் 18 – ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் அலைவரிசைகளில் ஒன்றாக எச்.டி (HD – High Definition) எனப்படும் அதி துல்லிய ஒளிபரப்பாக இன்று முதல், 231 என்ற எண்ணில் தொடங்குகின்றது “விண்மீன்” என்ற அலைவரிசை.

#TamilSchoolmychoice

ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் பல முறை பல நிகழ்ச்சிகளையும், பல திரைப்படங்களையும் எச்.டி. வடிவத்தில் ஆஸ்ட்ரோ  ஒளிபரப்பி வந்துள்ளது என்றாலும் தென்கிழக்காசிய நாடுகளில் முதன் முறையாக தமிழில் 24 மணி நேர அதி துல்லிய ஒளிபரப்பாக இன்று முதல் மிக விரிவாக விளம்பரங்களுடன் தொடங்குகின்றது விண்மீன்.

இந்த வேளையில், மலேசியாவில் தமிழ் தொலைக்காட்சியின் பின்னணிகளும் கடந்த கால சரித்திரங்களும் நம் நினைவில் வந்து கடந்த காலத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.

மலேசியத் தமிழ் தொலைக்காட்சி – கடந்த கால பார்வை

1960ஆம் ஆண்டுகளின் இறுதியில்தான் மலேசியாவில் கறுப்பு வெள்ளை படங்களைக் காட்டும் தொலைக்காட்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பலரது இல்லங்களில் முளைக்கத் தொடங்கின.

இள வயதில் நான் வளர்ந்த செந்துல் வட்டாரத்தில், கோலாலம்பூர் மாநகர சபையின் தொழிலாளர் குடியிருப்பில் இருந்த அத்தனை வீடுகளில் ஒரே ஒரு வீட்டில் மட்டும் தொலைக்காட்சி பெட்டி இருந்தது. அந்த வீட்டின் மையத்தில் (ஹால்) இருக்கும் அந்த தொலைக்காட்சி புதன்கிழமை இரவுகளில் மட்டும் அந்த வீட்டின் பின்னால் இருந்த விசாலமான சமையலறைக்கு மாற்றப்படும்.

காரணம், புதன்கிழமை இரவுகளில்தான் வாரத்துக்கு ஒன்று என தமிழ்ப் படம் காட்டப்படும். அதைக்காண ஏறத்தாழ 50பேர் முதல் 100பேர் வரை அந்த வீட்டில் கூடுவார்கள். அந்த வீட்டு நல்ல மனிதரும் “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதுபோல, எல்லோரும் படம் பார்க்க வீட்டின் நடுப்பகுதியில் இடப் பற்றாக்குறை ஏற்படும் என்ற காரணத்தால், தொலைக்காட்சி பெட்டியையே கழற்றி வீட்டுக்கு பின்னால் பொருத்தி வைப்பார். தொலைக்காட்சியில் தமிழ்ப் படம் பார்க்கும் மகிழ்வையும், வசதியையும் அந்த வட்டார மக்களுக்கே பெருந்தன்மையாக ஏற்படுத்தித் தந்த அந்த நல்ல மனிதரின் நினைவு இப்போது வந்து போகின்றது.

அடுத்து, தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி என்றால் “தும்புவான் மிங்கு” என்ற மலாய்ப் பெயரில் வாரந்தோறும் திரு பூபாலன் தயாரித்து வழங்கிய நேர்முகக் காணலோடு கூடிய ஒரே ஒரு நிகழ்ச்சிதான் அன்றைக்கு இந்தியர்களுக்கு கிடைத்தது.

இடையிடையே “இன்ஸ்பெக்டர் சேகர்” போன்ற ஓரிரு தொலைக்காட்சி நாடகங்களும் இடம் பெறத் தொடங்கின.

பின்னர் வண்ணத் தொலைக்காட்சி 1970ஆம் ஆண்டுகளில் மலேசிய இல்லங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. டிவி3 என்ற தனியார் ஒளியலையும் 1980ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது.

அந்த சமயத்தில் டிவி 3 மற்றும் டிவி 2 என இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் தமிழ்ப்படம் ஒளிபரப்பாகும். அப்போது, பத்திரிக்கைகளிலும், தகவல் ஊடகங்களின் வழியும் மலேசிய இந்தியர்கள் இதனை ஒரு பெரும் பிரச்சனையாக புகார் கூறிக் கொண்டிருப்பார்கள்.

தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்ச்சி என்றால் அது தமிழ்ப்படம் மட்டும்தான் என்பதுதான் அன்றைய நிலைமை. தீபாவளி போன்ற பெருநாட்களில் மட்டும் ஆடல் பாடல்களுடன் கூடிய சில கேளிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மலேசியத் தொலைக்காட்சியில் தமிழ் நாடகம்

1980ஆம் ஆண்டுகளில் மலேசியத் தமிழ் தொலைக்காட்சியில் தமிழ் நாடகமும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த வேளையில் அப்போதைய துணையமைச்சராகவும், ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவராகவும், ம.இ.காவின் தேசிய கலை, கலாச்சாரப் பகுதித் தலைவராகவும் இருந்த டத்தோ (இப்போது டான்ஸ்ரீ) சி.சுப்ரமணியம் அன்றைய தகவல் துறை அமைச்சரைச் சந்தித்து தமிழ் நாடகம் மலேசியத் தொலைக்காட்சியில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

அதன் விளைவாக “மத்தாப்பு” என்ற நாடகம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலேசியத் தொலைக்காட்சியில் இரண்டாவது ஒளியலையில் ஒளிபரப்பாகிய போது, மலேசிய இந்தியர்களிடத்தில் அது ஒரு பெரிய சாதனையாக பேசப்பட்டது.

அந்த நாடகத் தயாரிப்புக்கான செலவினங்களைக் கூட அரசாங்கத் தரப்பில் செய்ய முடியாது என அப்போது கூறப்பட்ட வேளையில், அப்போதைய பிரபல ஆடை வர்த்தக நிறுவனம் குளோப் சில்க் ஸ்டோர் அதற்குரிய செலவினங்களை விளம்பர அடிப்படையில் ஏற்றுக் கொண்டது.

ஏராளமானோர் அன்று அந்த “மத்தாப்பு” என்ற நாடகத்தைக் காண தங்களின் இல்லத்து தொலைக்காட்சியின் முன்னால் குவிந்தனர். ஏதோ முக்கியமான நேரலை சரித்திர நிகழ்வைக் காணப்போவது போல் அந்த நாடகத்தை ஆர்வத்துடன் பார்த்தனர்.

நாடகம் நன்றாக இல்லை என கடுமையான விமர்சனங்கள் பின்னர் எழுந்தாலும், மலேசியத் தொலைக்காட்சிகளில் பின்னர் நிறைய தமிழ் நிகழ்ச்சிகளும், நாடகங்களும் இடம்பெற நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அடித்தளம் அமைத்தது, வழிகளைத் திறந்து விட்டது அந்த சுமாரான மத்தாப்பு நாடகம்தான் என்பதுதான் சரித்திர உண்மை.

பின்னர் தமிழ்ப்படங்களும், இந்திப் படங்களும் அதிகமாக தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்டன. தமிழ்ப் படங்களை விட இந்திப் படங்கள் அதிகமாக ஒளிபரப்பாகின்ற என்ற குறைகூறல்களும் அந்தக் காலத்தில் எழுந்தன.

இன்றைக்கோ நவீன தொழில்நுட்பம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது.

ஆஸ்ட்ரோவின் வரவு

1990ஆம் ஆண்டுகளின் இறுதியில் நவீன தொழில் நுட்ப வசதிகளோடு மலேசியர்களுக்கு அறிமுகமான ஆஸ்ட்ரோவின் வானவில் என்ற அலைவரிசை தெளிவான ஒளிபரப்புடன் மலேசிய தமிழ் தொலைக்காட்சி சரித்திரத்தில் ஒரு முக்கிய சகாப்தத்தைப் பதித்தது.

பின்னர், வரிசையாக தமிழுக்கான அலைவரிசைகள் பெருகிக் கொண்டே போக இன்றைக்கு மலேசிய இந்தியர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை எந்த நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்து பார்ப்பது என்பதுதான்.

நிகழ்ச்சிகளையும், படங்களையும் பதிவு செய்து வைத்துக் கொண்டு நாம் விரும்பிய நேரத்தில் பார்த்துக்  கொள்ளும் வசதிகளும் இப்போது ஆஸ்ட்ரோவின் வழி ஏற்பட்டுவிட்டன.

அன்றைக்கு வாரத்துக்கு ஒரு தமிழ்ப் படம்தானா என்று புலம்பிய மலேசியத் தமிழன் இன்றைக்கு ஒரே நாளில் இத்தனை படங்களா, இதில் எதனைப் பார்ப்பது என மண்டை காயும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றான்.

அன்று ஒரே ஒரு “மத்தாப்பு” நாடகத்திற்காக அரசியல் ரீதியாக கோரிக்கை வைத்து, அதனையும்  பெரும் முயற்சிகளுக்கிடையில் பெற்ற நாம், இன்றைக்கு இத்தனை தமிழக தொலைக்காட்சித் தொடர்கள் நமக்குத் தேவைதானா என்றும் இவையெல்லாம் தமிழனின் கலாச்சார சீரழிவுகள் அல்லவா என்றும் புலம்பிக் கொண்டிருப்பதும் விவாதித்துக் கொண்டிருப்பதும் காலத்தின் கோலம்தான்!

இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வீடியோகோன் என்ற நிறுவனத்தின் ஒளிபரப்புகளும் மலேசிய இந்தியர்களின் இல்லங்களில் வலம் வரத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் நூற்றுக்கணக்கான இந்திய மொழி நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழும் வாய்ப்பும் நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கின்றது.

இதுவரை மலேசியத் தமிழ் தொலைக்காட்சி உலகில் ஆஸ்ட்ரோவின் வழி பல புரட்சிகளுக்கு வித்திட்டவர், இன்றைக்கும் சரித்திரம் படைத்துக் கொண்டிருப்பவர் – ஆரம்ப காலம் முதல் ஆஸ்ட்ரோவின் தமிழ்ப் பிரிவைத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்லும் திரு ராஜாமணிதான் என்பதையும் இந்த நேரத்தில் நாம் நினைவு கூரத்தான் வேண்டும்.

இத்தகைய, இன்றைய கால மாற்ற சூழலில் அதி துல்லிய ஒளிபரப்பாக இன்று முதல் உலா வரும் விண்மீன் மலேசியத் தமிழ் தொலைக்காட்சி சரித்திரத்தில் மற்றொரு முக்கியமான பதிவு!

முன்பு கூறியது போன்று கூடுதல் தமிழ்ப் படங்களுக்காகவும், சில தமிழ் நிகழ்ச்சிகளுக்காகவும் நாம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த காலம் மாறி, இன்றைக்கு நவீன தொழில் நுட்ப மாற்றங்களோடு அடுத்த கட்ட தமிழ் தொலைக்காட்சி புரட்சிக்கு மலேசியாவில் இன்று முதல் வித்திடுகின்றது, விண்மீன்.

விண்மீனை வாழ்த்தி வரவேற்போம்!

-இரா.முத்தரசன்