அக்டோபர் 21 – நேற்றுடன் நாடு முழுமையிலும் உள்ள பெரும்பாலான ம.இ.கா தொகுதிகளின் பேராளர் மாநாடுகள் முடிவடைந்த வேளையில், தேசிய நிலையிலான பதவிகளுக்கான போட்டிகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
நடப்பு மகளிர் பகுதித் தலைவியான கோமளா கிருஷ்ணமூர்த்தி(படம்) தான் மீண்டும் அந்த பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்றும் ஆனால் மகளிர் பகுதித் தலைவி பதவிக்குப் போட்டியிட முன்வந்துள்ள டத்தின் டாக்டர் பிரேமாவுக்கு ஆதரவு தெரிவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
இந்த முறை கோமளா கிருஷ்ணமூர்த்தி மகளிர் பகுதி பேராளராக மீண்டும் தேர்வு பெற முடியாத காரணத்தினால்தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.
பூச்சோங் தொகுதியின் மகளிர் பகுதித் தலைவியான மோகனா மகளிர் பகுதியின் தேசியத் தலைவி பதவிக்குப் போட்டியிட ஏற்கனவே தயாராகி வருகின்றார். இவருக்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜி.பழனிவேலுவின் ஆதரவும், அவரது அணியினரின் ஆதரவும் உண்டு என்று கூறப்படுகின்றது.
மோகனாவின் அணியில் செனட்டரும் சிலாங்கூர் மாநிலத் தலைவியும் தேசியத் தலைவர் பழனிவேலுவின் தீவிர ஆதரவாளருமான திருமதி சிவபாக்கியம் துணைத் தலைவராகவோ, மகளிர் பிரிவுக்கான மத்திய செயற்குழு பதவிக்கோ போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் டத்தின் பிரேமா மற்றும் கோமளா இருவரும் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவானவர்கள் என்றும், எனவே இதனால் டாக்டர் சுப்ரமணியம் அணியினர் டத்தின் பிரேமாவை ஆதரித்து முழுமையாக களத்தில் இறங்குவர் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் பழனிவேலுவுக்கும் டாக்டர் சுப்ராவுக்கும் இடையில் உருவான தேசியத் தலைவருக்கான போட்டியில் கோமளா கிருஷ்ணமூர்த்தி டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் ம.இ.கா. மகளிர் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
மகளிர் பகுதியில் உருவாகியுள்ள இந்த தலைமைத்துவ போட்டி, கட்சியில் தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் உருவாகியுள்ள இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டிகளின் முன்னோட்டமாக இருக்கும் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.