Home நாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா – சிறப்புப் பார்வை

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ம் ஆண்டு பொன்விழா – சிறப்புப் பார்வை

954
0
SHARE
Ad

IMG_9679கோலாலம்பூர், அக் 21 – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் வெவ்வேறு துறைகளில் தமிழுக்கு சேவையாற்றிய அறிஞர்களுக்கு தங்கப்பதக்கமும், மலேசிய தமிழ் எழுத்தாளர்களில் 50 பேருக்குப் பண முடிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பல தமிழ் அறிஞர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#TamilSchoolmychoice

தலைநகரில் உள்ள டைனஸ்டி விடுதியில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் கோலாகலமாகத் துவங்கிய விழாவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், செயலாளர் ஆ.குணநாதன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.துரைராஜ், கல்வித்துறை துணையமைச்சர் கமலநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

காலத்தைக் கருத்தில் கொண்டு முதல் நாள் சனிக்கிழமை 25 எழுத்தாளர்களுக்கும், அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை 25 எழுத்தாளர்களுக்கும் பணமுடிப்புகள் வழங்கி கௌரவித்தனர்.

நூல் வெளியீடு

இதனிடையே, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மூன்று நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன.

முதல் நாள் விழாவில் 50 ஆம் ஆண்டு பொன்விழா சிறப்பு மலர், சிறுவர், இளையோர் சிறுகதைகள் ஆகிய நூல்களை கல்வி துணையமைச்சர் ப.கமலநாதன் வெளியிட்டார். இரண்டாம் நாளான நேற்று ‘அரைநூற்றாண்டு காலச்சுவடு’ என்ற நூலை இளைஞர், விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் வெளியிட ஆதி.இராஜகுமாரன் பெற்றுக்கொண்டார்.

முதல்நாள் விழாவில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டதோடு, மறுநாள் விழாவில் கலந்து கொள்ளும் வகையில் அனைவருக்கும் தங்கும் வசதியையும் மலேசிய எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள், படங்கள்:

பீனிக்ஸ்தாசன்