புது டில்லி, அக் 22- குற்றவழக்குகளில் சிக்கி 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெறும் நாடளுமன்ற உறுப்பினர்கள் பதவி வகிக்க தகுதியற்றவர்கள் என்று கடந்த ஜூலை மாதம் உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது.
அந்த தீர்ப்பை முடக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தங்கள் செய்ய முயன்றது. ஆனால், நாடெங்கும் எழுந்த எதிர்ப்பால் அதை மத்திய அரசு கைவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி காரணமாக பாராளுமன்ற மேல்சபை காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் ரஷீத் மசூத் முதன் முதலாக தன் பதவியை பறிகொடுத்தார். மருத்துவக் கல்லூரியில் தகுதி இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்த ஊழல் காரணமாக அவர் நாடளுமன்ற பதவியை இழந்துள்ளார்.
இந்த நிலையில் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மற்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஜெகதீஷ் சர்மா ஆகிய இருவரின் நாடளுமன்ற பதவி எப்போது பறிக்கப்படும் என்பதில் குழப்பம் நிலவியது. பதவி பறிப்பு உத்தரவை வெளியிடுவது யார் என்ற சட்டச்சிக்கல் எழுந்தது.
லல்லு பிரசாத், ஜெகதீஷ் சர்மா இருவரையும் உடனே தகுதி நீக்கம் செய்யலாம் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன வதி சில தினங்களுக்கு முன்பு யோசனை தெரிவித்தார். பிறகு அதை பரிந்துரையாகவும் எழுதிக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து லல்லு பிரசாத், ஜெகதீஷ் சர்மாவின் பதவி பறிப்பு குறித்து பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆலோசனை நடத்தி வந்தார். சட்ட நிபுணர்களையும் அழைத்துப் பேசிய அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
லல்லு, ஜெகதீஷ் சர்மா இருவரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலகம் அறிவித்தது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8 (3) பிரிவின் கீழ் லல்லு மீதான பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சப்ரா, ஜெகனாபாத் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும்.
லல்லு பிரசாத் சப்ரா தொகுதியில் இருந்தும் ஜெகதீஷ் சர்மா ஜெகனா பாத் தொகுதியில் இருந்தும் நாடளுமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தனர். ஒரு தொகுதி காலியானால், அந்த இடத்துக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் இன்னும் 5 மாதங்களில் முடிவடைய உள்ளதால், இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை.