Home இந்தியா பீகாரில் நரேந்திர மோடி கூட்டத்தில் பயங்கரம் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்பு!

பீகாரில் நரேந்திர மோடி கூட்டத்தில் பயங்கரம் அடுத்தடுத்து 7 குண்டுவெடிப்பு!

527
0
SHARE
Ad

modi-2

பாட்னா, அக் 28- பீகாரில் நரேந்திர மோடி பேச இருந்த கூட்டத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. ரயில் நிலையத்திலும் திரையரங்குகள் முன்பும் இரு குண்டுகள் வெடித்தன. தொடர் குண்டு வெடிப்புகளில் 5 பேர் இறந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.  மேலும் சில குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பீகாரில் பா.ஜ. கூட்டணியில் இருந்து முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பிரிந்து விட்டதால் அங்கு பா.ஜ.வின் பலத்தை காட்டும் வகையில் பாட்னாவில் காந்தி மைதானத்தில் நேற்று மோடியின் பிரம்மாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தொண்டர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்க வசதியாக 17 ரயில்கள், 3000 பேருந்துகளை பா.ஜ. ஏற்பாடு செய்திருந்தது. கேமரா மூலம் கண்காணிப்பு, வாகன சோதனை என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

#TamilSchoolmychoice

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாண்டி, பாட்னா ரயில் நிலையத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் முதல் குண்டு வெடித்தது. ரயில் நிலையத்தில் உள்ள 10வது மேடையில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. பயணிகள் அலறி அடித்து ஓடினர். குண்டு வெடித்ததில் ரயில் மேடையில் இருந்த 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.

patnainc

 

உடனடியாக காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரயில் நிலையம் முழுவதும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்த காவல்துறையினர் மேலும் 2 குண்டுகளை கைப்பற்றி செயலிழக்க செய்தனர். கழிவறையில் கைப்பற்றப்பட்ட குண்டை செயலிழக்க செய்யும் முயற்சியின்போது ஒரு காவல் அதிகாரி காயமடைந்தார். இந்த பரபரப்பின் இடையே ரயில் நிலையம் அருகே உள்ள திரையரங்கு முன்பு மற்றொரு குண்டு வெடித்தது.

27-patna-blast-600-jpg

 

இதனால் ஏற்பட்ட பரபரப்பும் பதற்றமும் அடங்கும் முன், பா.ஜ. தொண்டர்கள் திரண்டிருந்த காந்தி மைதானத்தை சுற்றிலும் 5 இடங்களில் பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. மைதானத்திலும் சுற்றி இருந்த பகுதிகளிலும் புகை மண்டலம் ஏற்பட்டது. பீதியடைந்த தொண்டர்கள் சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்புகளில் 5 பேர் பலியாயினர். 85க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். காயமடைந்தவர்கள் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மைதானத்தில் இருந்து மேலும் 4 குண்டுகளை போலீசார் கைப்பற்றி செயலிழக்க செய்தனர். ஒரு குண்டு மேடைக்கு 150 அடி தூரத்தில் புதைக்கப்பட்டிருந்தது. குண்டுகள் கைப்பற்றப்பட்டதால், பெரும் அசம்பாவிதமும் உயிர்சேதமும் தவிர்க்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொள்ள பிற்பகல் 1 மணிக்கு பாட்னா வந்த நரேந்திர மோடியிடம் குண்டு வெடிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, காந்தி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் நரேந்திர மோடி பேசினார். ஆவேசத்தோடும் பதற்றத்தோடும் இருந்த தொண்டர்கள் மோடியின் பேச்சை ஆரவாரம் செய்தபடி கேட்டனர்.

குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன் மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மக்கள் அமைதியாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் நிதிஷ்குமாருடன் தொலைபேசியில் பேசி விவரங்களை கேட்ட பிரதமர், விசாரணைக்கு மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். சதியில் 11 பேர் ஈடுபட்டதாகவும், அந்த கும்பலில் தானும் ஒருவன் என்றும் அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். குண்டு வெடிப்புக்கு காரணமான அமைப்பை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்த பாட்னா காவல்துறையினர் அமைப்பின் பெயரை வெளியிட மறுத்துள்ளனர்.

நரேந்திர மோடி உட்பட பல தலைவர்களின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளதாக உளவுத்துறையினர் ஏற்கனவே எச்சரித்தனர். மோடியின் கூட்டத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதையும் மீறி பாட்னாவில் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. மோடியின் உயிரை குறிவைத்து இந்த குண்டு வெடிப்புகள் நடந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால் நாடு முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.