கோலாலம்பூர், அக் 29 – பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் மிகவும் பலவீனமாக இருப்பதோடு, மக்களின் ஆதரவும் குறைந்து வருவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருத்து தெரிவித்துள்ளார்.
நஜிப் தலைமையிலான அரசாங்கம் குறித்து அவ்வப்போது கடும் விமர்சனம் செய்து வரும் மகாதீர், நேற்று மீண்டும் அது போன்ற ஒரு விமர்சனத்தை முன் வைத்தார்.
எதிர்கட்சிகளின் தீவிரவாதப் போக்கிற்கு செவிசாய்த்து வரும் நஜிப் தலைமையிலான அரசாங்கம் பலமாக இல்லை என்றும், நாட்டை வழி நடத்த சரியான தலைவர் ஒருவர் இல்லை என்றும் மக்களிடையே பேச்சுக்கள் நிலவி வருவதாக மகாதீர் குறிப்பிட்டார்.
மேலும், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுங்கள் என்று எதிர்கட்சிகள் கோருவது மிகவும் மோசமான நிலை என்றும் மகாதீர் தெரிவித்தார்.
எதிர்கட்சிகள் கூறுவதற்கெல்லாம் செவி சாய்த்து வந்தால், தங்களுக்கு ஆதரவாக நன்றியுடன் இருப்பார்கள் என்று நஜிப் எண்ணினால் அது மிகப் பெரிய தவறாகும் என்றும் மகாதீர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே 13 வது பொதுத்தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு நஜிப் எடுத்துக்கொண்ட தாமதம் குறித்தும், தேர்தலுக்குப் பின்னர் தேசிய முன்னணியின் சுமாரான வெற்றி குறித்தும் மகாதீர் கடும் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.