நவம்பர் 2 – இன்று நாடு முழுவதும் தீபாவளி திருநாள் இந்துப் பெருமக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தலைநகர் எங்கும் பட்டாசுகளின் ஒலிகள் கேட்டுக் கொண்டே இருக்க, வண்ண மயமான வாண வேடிக்கைகள் தலைநகரின் வானத்தின் எல்லா மூலைகளையும் ஆக்கிரமித்தன.
தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று காலை 9.30 மணி முதல் கோலாலம்பூர் பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய வளாகத்தில் தீபாவளி திறந்த இல்ல பொது விருந்துபசரிப்பு நடைபெற்றது.
இந்த திறந்த இல்ல விருந்துபசரிப்பில் திரளான அளவில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காலை மணி பத்து மணியளவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் கலந்து கொள்ள பின்னர் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோரும் இந்த தீபாவளி விருந்துபசரிப்பில் கலந்து கொண்டார். துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசினும் இந்த விருந்துபசரிப்பில் கலந்து கொண்டார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த நிகழ்வில் பிரதமரும், துணைப் பிரதமரும் கலந்து கொண்டனர்.
மற்ற தேசிய முன்னணி கட்சித் தலைவர்களும் திரளாக இன்று நடைபெற்ற ம.இ.கா பொது விருந்துபசரிப்பில் கலந்து சிறப்பித்தனர்.
கெராக்கானின் தேசிய உதவித் தலைவர் கோகிலன் பிள்ளை, முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா, ஆகியோரும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு ம.இ.கா.வின் தேர்தல் ஆண்டு என்பதால், கட்சியின் முக்கியத் தலைவர்களும், தொகுதித் தலைவர்கள் பலரும் இந்த விருந்தில் கலந்து கொண்டிருந்தனர்.