நவம்பர் 6- வயதானால் வரும் என நம்பப்பட்ட பல நோய்கள் இன்று இளம் வயதினரையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது. வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது எனக் காரணங்கள் பல சொல்லலாம். வயதானவர்களிடமிருந்து இளம் வயதினருக்கு இடம் பெயர்ந்துள்ள நோய்களில் ழுழங்கால் மூட்டு வலிக்கே முதலிடம் என்பது அதிர்ச்சி தரும் தகவல் என்றால் இன்னும் ஒரு அதிர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பது.
ஆர்த்ரைடிஸ் எனப்படுகிற இது சாதாரண வலியுடன் தான் தன் அறிகுறிகளைக் காட்ட ஆரம்பிக்கிறது. அதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சையளிக்காதவர்கள் நாளடைவில் நடக்கவே முடியாத அளவுக்கு முடங்கிப் போகலாம் என்கிறார் பிரபல எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜசேகர் ரெட்டி.
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸூம், ருமட்டாயிடு ஆர்த்ரைடிஸூம் பெண்களை அதிகம் தாக்கக் கூடியவை. ழுழங்காலில் உள்ள இணைப்பு மற்றும் எலும்புகளுக்கிடையில் ஒருவித சவ்வு இருக்கும். இவைதான் முழங்கால் மூட்டுகள் தேய்ந்து போகாமல் பாதுகாக்கும். வயதான காரணத்தால் இது தேய்ந்து போய் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய ஆரம்பிக்கிறபோது தான் வலி வருவது. இது தான் ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்.
நோய் எதிர்ப்பு சக்திக்கான செல்கள் பாதிக்கப்பட்டு முழங்கால் இணைப்புகளில் வீக்கமும், அழற்சியும் ஏற்பட்டு வரக்கூடிய வலிக்கு ‘ருமட்டாயிடு ஆர்த்ரைடிஸ்’ என்று பெயர். இரண்டுக்குமே வலி தான் முதல் அறிகுறி. சாதாரண வலி தானேனு வலி நீக்கும் மாத்திரையை எடுத்துக்கிறதும் நமது அலட்சியமும் ஒரு கட்டத்துல பாதிக்கப்பட்டவங்களோட நடமாட்டத்தை தடை செய்யற அளவுக்கு மோசமாகலாம்.
இது சாதாரண வலியில்லை, சகிச்சுக்கிற வலியில்லைனு நினைக்கிறவங்க உடனடியாக எலும்பு, மூட்டு மருத்துவரை பார்க்கணும். முதல் கட்டமா அவங்களுக்கு வலிக்கான மாத்திரைகளை பரிந்துரைப்போம். உடல் பருமன் அதிகமுள்ளவங்களாக இருந்தா உடற்பயிற்சி உணவுக்கட்டுப்பாடு, மூலமா அதை குறைக்கணும். இது தற்காலிக நிவாரணம் தரும். வலி குறையாத பட்சத்துல அடுத்து அல்ட்ராசவுண்ட் தெரபியும் அடுத்த கட்டமா மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருக்கும் என்கின்ற மருத்துவர் பிரச்சனை வராமல் தவிர்க்க சில ஆலோசனைகளையும் தெரிவிக்கிறார்.
பெண்களுக்கே இந்த பிரச்சனை அதிகம் வருவதால் 30% எச்சரிக்கை அவசியம்.
கடைப்பிடிக்க வேண்டியவை
1.முதலில் அதிக எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வெண்டும்.
2.கால்சியம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
3.கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்து நார்ச்சத்துகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
4.தினம் ஏதாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5.மிக முக்கியமாக மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.