சென்னை, நவம்பர் 6-தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.திரையிட்ட நாள் முதல் அரங்கு நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கின்றது.
அஜித்தின் ஆரம்பம் படத்தின் பட்ஜெட் ரூ.60 கோடி . ‘ஆரம்பம்’ படம், வெளியான முதல் நாளே தமிழகத்தில் மட்டுமே ரூ.9.12 கோடி வசூலை அள்ளியிருக்கிறது.’ஆரம்பம்’ வசூலில் சாதனை படைக்க வாய்ப்புள்ளது என்றும் வர்த்தக நிபுணர் திரிநாத் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மட்டுமன்றி கோயம்புத்தூர், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் ‘ஆரம்பம்’ படத்தின் முன்பதிவு மற்றும் வசூலைப் பார்த்து விநியோகஸ்தர்கள் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதுவரை வெளிவந்துள்ள அஜித் படத்தின் வசூல் சாதனையைக் கண்டிப்பாக இப்படம் முறியடிக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
அஜீத் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் இந்த படத்தின் வெற்றியில் குறிப்பிடத்தக்க அளவு கன்னட நடிகர், நடிகைகளும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் நடிப்பும் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாகக் கருதப்படுகின்றது. தெலுங்கில் இந்தப் படம் மறுபதிவு செய்யப்பட்டு ஆந்திராவின் பல திரையரங்குகளில் வெளியானது.
முன்பதிவுகள் இல்லாதபோதும், ஐதராபாத் உட்பட பல இடங்களில் ஆரம்பத்திற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது.
முதல் நாள் காட்சிகளில் மட்டும் ஆந்திராவில் ரூ.6 கோடி வசூல் ஆனது. ஆந்திராவில் விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு பின், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் ஆரம்பம்தான்.