நியூயார்க், நவ 7- அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவழி இளைஞரான ராஜ் முகர்ஜி(29) வெற்றி பெற்றார்.
நியூஜெர்சியின் 33வது மாவட்டத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முதன் முறையாக போட்டியிட்ட இவர் இதற்கு முன்னர் ஜெர்சி நகர துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த இவரது தந்தை உடல் நலக்குறைவால் அமெரிக்காவை விட்டு சொந்த ஊருக்கு போன பிறகும் ராஜ் முகர்ஜி தனது விடா முயற்சியால் பல இடங்களில் வேலை செய்து அமெரிக்காவில் தனது கல்வியை தொடர்ந்தார்.
நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் மீது தீவிரவாத தாக்குதல் நடந்த பிறகு தனது 17வது வயதில் அமெரிக்க ராணுவத்தின் ‘மெரைன்’ உளவுப் பிரிவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
19வது வயதில் சொந்தமாக தொழில் தொடங்கிய இவர் 24வது வயதில் நியூஜெர்சி நகர வீட்டு வசதி குழும ஆணையர் மற்றும் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
நியூஜெர்சி வரலாற்றில் இவ்வளவு இளைய வயதில் இத்தகைய பொறுப்புகளை வேறு யாரும் வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.