பெட்டாலிங் ஜெயா, நவ 7 – சிங்கப்பூர், இந்தியா, ஸ்ரீலங்கா, தாய்வான், சீனா மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளை ஒப்பிடும் போது ஆசியாவிலேயே ஆங்கிலத்தை நன்றாகப் பேசக்கூடியவர்கள் இருப்பது மலேசியாவில் தான் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த ஆங்கில மொழி கற்பிக்கும் பள்ளி ஒன்று தனது ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது.
கல்வியே முதன்மை (Education First) என்ற அப்பள்ளி தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், ஆசியாவிலுள்ள 13 நாடுகளில் ஆங்கில மொழியை நன்றாகப் பேசுபவர்களின் பட்டியலில் மலேசியாவிற்கு தான் அதிக புள்ளிகள் கொடுத்துள்ளது.
உலக அளவில் நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் 60 நாடுகளில், மலேசியா 11 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த வலைத்தளத்தில், ஆசியாவில் இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆங்கில மொழி கற்பதில் தங்களை உருமாற்றம் செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.