Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா தேர்தல்: வேள்பாரி போட்டியிலிருந்து விலக முடிவு!

ம.இ.கா தேர்தல்: வேள்பாரி போட்டியிலிருந்து விலக முடிவு!

611
0
SHARE
Ad

INA_7162பெட்டாலிங் ஜெயா, நவ 7 – ம.இ.கா வில் நீண்ட காலம் தலைவராக இருந்த டத்தோஸ்ரீ எஸ். சாமிவேலுவின் மகனான எஸ்.வேள்பாரி வரும் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.கா தேர்தலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளார்.

தனது தந்தையின் செல்வாக்கு இன்றி சுயமாக போராடி வெற்றியடைய மட்டுமே தான் விரும்புவதாகவும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.

“நான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர் என்று எதிலும் போட்டியிடப்போவதில்லை. காரணம் நான் போட்டியிடுவதாக இருந்தால், என் தந்தையை முன்வைத்து தான் பிரிவுத் தலைவர்கள் மற்றும் பேராளர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவிப்பார்கள். என் தந்தை கட்சிக்கும், சமூகத்திற்கும் கடுமையாக உழைத்திருப்பதால் அவர்கள் அனைவரும் ஆதரவளிப்பார்கள்.” என்று வேள்பாரி கூறினார்.

#TamilSchoolmychoice

“ஆனால் நான் என்னுடைய சுய காலில் நிற்க ஆசைப்படுகின்றேன். நான் என்னுடைய பாதையில் சுயமாக வெற்றியடைய வேண்டும்” என்றும் வேள்பாரி குறிப்பிட்டார்.

தனது முடிவு குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் ஜி.பழனிவேலுவிடம் அறிவித்து விட்டதாகவும் வேள்பாரி தெரிவித்தார்.

மேலும், கட்சி உறுப்பினர்களுக்கு தன்னுடைய பங்களிப்பையும், சேவையையும் நிரூபிக்க, எதிர்காலத்தில் கட்சியின் முக்கியப் பதவிகளுக்குத் தான் நிச்சயம் போட்டியிடப்போவதாகவும் வேள்பாரி உறுதிபடக் கூறினார்.

கட்சியின் 3 தேசிய உதவித் தலைவர் பதவிக்கு நடப்பு உதவித் தலைவர்களான டத்தோ எம்.சரவணன், பேராக் சபாநாயகர் டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி ஆகியோருடன் மேலும் 8 பேர் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அவர்களில், ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி.மோகன், கட்சியின் பொருளாளர் டத்தோ ஜஸ்பால் சிங், முன்னாள் ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன், முன்னாள் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், ஜோகூரைச் சேர்ந்த டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் ம.இ.கா கிள்ளான் பிரிவுத் தலைவர் ரகு மூர்த்தி ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சியின் துணைத் தலைவர், உதவித் தலைவர் மற்றும் 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் நவம்பர் 16 ஆம் தேதியும்,தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.