வாஷிங்டன், நவ 8 – கிளன் டிப்பன்ஸ் மெரின் ஆசியா (Glenn Defence Marine Asia Ltd) என்ற நிறுவனத்தின் தலைவரான பேட் லியோனார்ட் (வயது 49) என்று எல்லோராலும் அழைக்கப்படும் பிரான்சிஸ் மீது கடந்த புதன்கிழமை லஞ்ச ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டது.
பிரான்ஸிஸ் ஒரு மலேசியராவார். பல கோடி டாலர் மதிப்புள்ள அரசாங்க குத்தகைகளைப் பெறுவதிலும், அதனை அமல்படுத்துவதிலும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு லஞ்சமாக சொகுசு பயணங்களையும், விலைமாதர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் கடற்படைத் தளபதி ஜோஸ் லூயிஸ் சான்செஸ் (வயது 41) என்பவரும் கடந்த செவ்வாய்க்கிழமை புளோரிடா தம்பாவில் கைது செய்யப்பட்டு, புதன்கிழமையன்று புளோரிடாவிலுள்ள பெடரல் நீதிமன்றத்திற்கு முதன் முறையாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
அமெரிக்க கடற்படை குறித்த உள்விவகாரங்களையும், தகவல்களையும் வெளிநாட்டு குத்தகை ஒப்பந்ததாரரிடம் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர்களோடு சேர்த்து அமெரிக்க கடற்படையின் முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படை குற்றப்புலனாய்வு இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் என பலர் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி வழக்கில், குறிப்பிட்ட சில உயர்மட்ட அதிகாரிகள் சொந்த லாபத்திற்காகவும், மனநிறைவிற்காகவும் தங்களின் நேர்மையையும் வரிசெலுத்தும் லட்சக்கணக்கானோரின் டாலரையும் அடகு வைக்க முன்வந்துள்ளது வேதனை அளிப்பதாக அமெரிக்க தலைமை வழக்கறிஞரான லாவ்ரா டஃபி தெரிவித்தார்.
கடற்படைத் துறையில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலை செய்து வரும் வேளையில், குறிப்பிட்ட தரப்பினரின் செயலால் கடற்படை பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கும் விதமாக, அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும், கடற்படையின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், மோசடிகளில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் லாவ்ரா தெரிவித்தார்.