Home கலை உலகம் “கைகொடுக்கும் கடைசி நேர கான்செப்ட்” – அசத்தல் மன்னர்கள் வெங்கடேஷ், கிறிஸ்டோபருடன் ஆரவார சந்திப்பு!

“கைகொடுக்கும் கடைசி நேர கான்செப்ட்” – அசத்தல் மன்னர்கள் வெங்கடேஷ், கிறிஸ்டோபருடன் ஆரவார சந்திப்பு!

865
0
SHARE
Ad

கோலாலம்பூர், நவ 11 – அன்று மதியம் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது எழுத்தாளர் செண்பகவள்ளியிடமிருந்து திடீர் அழைப்பு. தாசன் இன்று மாலை இந்தியாவிலிருந்து வந்திருக்கும் எனது நண்பரை சந்திக்கப்போகிறேன். விருப்பம் இருந்தால் உடன் வாருங்கள் என்றார். சகோதரி செண்பா அவர்களின் நண்பர் என்றால், அதுவும் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார் என்றால் நிச்சயம் யாராவது ஒரு முக்கியப் பிரமுகராக இருப்பார் அல்லது மிகவும் புகழ்வாய்ந்த நபராக இருப்பார் (முன் அனுபவம்). மூளை பரபரத்தது யாராக இருக்கும்? சரி அவரிடமே கேட்டுவிடுவோம் என்று யார் அக்கா அது என்றேன். நமக்கு மிகவும் தெரிந்தவர் தான் ‘அசத்தல் மன்னன்’ வெங்கடேஷ் என்றார்.

வெங்கடேஷ் என்றவுடன் எனது நினைவுகள் ஒரு 5 வருடங்கள் பின்னோக்கி சென்றன. அதுவரை சினிமாவில் மட்டுமே காமெடி காட்சிகளை ரசித்து வந்த மக்களுக்கு சற்று வித்தியாசமாக, காமெடிக்கென்றே ஒரு தனி நிகழ்ச்சி படைத்து அதில் தமிழகத்தில் ஆங்காங்கே இருந்த திறமைசாலிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து கலக்கி, அசத்திய நிகழ்ச்சிகள் தான் கலக்கப்போவது யாரு மற்றும் அசத்தப்போவது யாரு.

#TamilSchoolmychoice

ஒரு அழகான மேடை, அங்கே புன்னகையுடன் பார்வையாளர்கள் மற்றும் இரண்டு நடுவர்கள். வாரம் ஒரு சிறப்பு நடுவர். காமெடி செய்ய வந்தாலும் கோட் சூட் அணிந்து டிப் டாப்பாக களமிறங்கும் அசத்தல் மன்னர்கள் என ஒரு சில வருடங்கள் அந்த நிகழ்ச்சிகள் சின்னத்திரையை கலக்கோ கலக்கு என்று கலக்கின.

அதிலும் வெங்கடேஷ் மற்றும் அவரது குழுவை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. அவர்களின்  ‘கான்செப்ட்’ காமெடிகள் இன்றும் நமது நினைவுப் பக்கங்களில் நின்று லட்சம் லைக்குகள் வாங்குகின்றன.

ஒருவழியாக மாலை செண்பா அக்காவுடன் கிளம்பி பிரிக்பீல்ட்ஸை அடைந்து வெங்கடேஷை சந்தித்தோம். அங்கு இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது வெங்கடேஷுடன் இணைந்து நிகழ்ச்சி செய்யும் கிறிஸ்டோபரும் இருந்தார். இருவரையும் பாண்டியன் உணவகத்தில் வைத்து சந்தித்தோம்…

காபி கொண்டுவரச் சொல்ல எத்தனித்த போது வெங்கடேஷும் , கிறிஸ்டோபரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, தயக்கத்தோடு ஒரு கப் போதும் நாங்கள் இருவரும் ஷேர் செய்து கொள்கிறோம் என்றார்கள்.

ஆச்சர்யத்தோடு அவர்களைப் பார்த்த போது, வெங்கடேஷ் அவராகவே முன்வந்து, “எங்கள் ஊரில் காபி என்றால் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறிய கப்பில் தருவார்கள்… மலேசியாவில் ஒரு காபி குடித்தால் போதும் போல சாப்பாடே தேவையில்லை. அவ்வளவு பெரிய கப்பில் தருகிறார்கள்” என்று தொடக்கத்திலேயே ஒரு சிரிப்பு வெடியை கொளுத்திப் போட்டார்.

அதன் பிறகு என்ன …. சிரிக்க சிரிக்க அவர்களுடன் பேசிய சுமார் ஒரு மணிநேர அசத்தல் நிகழ்ச்சி …இல்லை … அசத்தல் நேர்காணல் இதோ உங்களுக்காக எழுத்து வடிவில் …

(இந்த நேர்காணல் முழுவதிலும் வெங்கடேஷும் , கிறிஸ்டோபரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையோடும், ஒரே கருத்தோடும் இயல்பாக நடந்து கொண்டனர். தொலைக்காட்சியில் பார்த்த அசத்தல் மன்னர்களில் ஒற்றுமையை நேரிலும் கண்டு வியந்தோம்.)

செல்லியல்: எப்படி தொடங்கியது உங்கள் கலையுலகப் பயணம்?

வெங்கடேஷ்: நாங்கள் அடிப்படையில் ‘ரைஸ் அட்வெர்டைஸிங் கம்பெனி’ என்று ஒன்று வைத்து நடத்தி வருகின்றோம். அதன் மூலம் முக்கிய விழாக்களில் காமெடி நிகழ்ச்சிகளை செய்து கொடுப்பது தான் எங்கள் நிறுவனத்தின் சேவை.

ஆரம்ப நாட்களில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சேதுராமன் மற்றும் மனிதத் தேனீ என்று அழைக்கப்படும் இரா.சொக்கலிங்கம் ஆகியோரது முயற்சியில் ‘நகைச்சுவை மன்றம்’ என்ற நிகழ்ச்சியை மதுரையில் நடத்தி வந்தோம். மதுரை மக்களிடையே எங்கள் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

அப்போது கு.ஞானசம்பந்தன் அவர்களின் ஆலோசனைப்படி, 1992 ஆம் ஆண்டு ‘காமெடி பாய்ஸ்’ என்ற குழுவை அமைத்தோம். அதன் மூலம் இன்று வரை சுமார் 2500 முதல் 3000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.

எங்களது மேடை நிகழ்ச்சியை பார்த்த இயக்குநர் ராஜ்குமார், அதை  ‘கலக்கப்போவது யாரு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உருமாற்றம் செய்து உலகமே பார்த்து ரசிக்க வைத்தார்.

2005 ல் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியை விஜய்டிவி தொடங்கிய போது, எங்கள் ‘காமெடி பாய்ஸ்’ குழுவில் இருந்து சசி, தண்டபானி ஆகியோர் தேர்வு பெற்றனர். அப்போது நான் விளம்பரக் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்ததால் என்னால் அப்போது கலந்து கொள்ள முடியவில்லை. பின்னர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்ததும் எங்கள் குழுவில் பலரின் தூண்டுதலால் நானும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். தமிழ்நாடு முழுவதில் இருந்தும் சுமார் 1500 பேர் நிகழ்ச்சிக்கான தேர்வில் கலந்து கொண்டனர். அதில் இறுதியாக 55 பேர் தேர்வு பெற்றனர். அதில் நானும் ஒருவன்.இப்படி தான் தொடங்கியது எனது கலையுலகப் பயணம் என்றார்.

செல்லியல்: உங்கள் குழுவின் வெற்றிக்கான இரகசியம் என்ன?

வெங்கடேஷ்: எங்களோட ஒற்றுமை மற்றும் ‘டீம் வொர்க்’ தான் எங்களின் வெற்றிக்கான இரகசியம் … சில நேரங்களில் கடைசி நேரத்தில் தான் கான்செப்ட் கைகொடுக்கும்.

பல நேரங்களில் ராத்திரி முழுவதும் யோசிச்சு யோசிச்சு கான்செப்ட் கிடைக்காம குப்புற விழுந்து தூங்கிட்டு பிறகு நிகழ்ச்சி அன்னைக்கு காலையில யோசிச்சு கான்செப்ட் பிடிச்சிருக்கோம்.

அந்த கடைசி நேரத்திலும் அதை ஆடியன்ஸ் ரசிக்கிற மாதிரி செய்யுறதுக்கு எங்கள் ‘டீம் வொர்க்’ தான் முக்கியக் காரணம்.

அப்படி நாங்கள் செய்து வெற்றி பெற்ற கான்செப்ட்கள் தான் இன்னைக்கும் மக்கள் மனசுல நிக்குது.. 11 மணிக்கு ஒரு பார்சல், நக்கீரனும் நர்ஸரி குழந்தைகளும், அருவா வித் ஆறுமுகம், அபசகுணம் போன்ற கான்செப்ட்கள் இன்னைக்கும் யூடியூப் ல பலராலும் பார்த்து ரசிக்கப்படுகின்றது .

கிறிஸ்டோபர்: இந்த பாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமா இருப்பாருன்னு முடிவு பண்ணிட்டா அதை வேற யாரும் செய்ய மாட்டோம். அந்த கதாப்பாத்திரம் செஞ்சா நல்ல புகழ் கிடைக்கும்னு தெரிஞ்சாலும் அதை வேற யாரும் செய்ய நினைக்க மாட்டாங்க. விட்டுக்கொடுத்துருவாங்க அது தான் எங்களோட வெற்றி.

செல்லியல்: உங்கள் நிகழ்ச்சிகளில் மறக்க முடியாத நிகழ்ச்சி எது? அதில் கலந்து கொண்ட சிறப்பு நடுவர் யார்?

வெங்கடேஷ்: எங்கள் அசத்தப்போவது யார் நிகழ்ச்சியில் பல திரை நட்சத்திரங்கள் சிறப்பு நடுவர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.அவர்கள் எல்லோருமே நிகழ்ச்சியை பார்த்து ரசித்து மனம் விட்டு பாராட்டியிருக்கின்றனர்.அவர்களில் சிலர் சிரித்து சிரித்து கண்களில் கண்ணீரே வந்திருக்கிறது.

பாக்கியராஜ் சார் நடுவராக வந்திருந்த போது நானும் கிறிஸ்டோபரும், சசியும் செய்த தந்தை, மகன்கள் கான்செப்ட்டை மிகவும் ரசித்ததோடு மட்டுமில்லாமல், இது ஒரு குறும்படம் மற்றும் அவார்டு வாங்க வேண்டிய படத்திற்கான கான்செப்ட் இங்கே இவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று பாக்கியராஜ் சார் பாராட்டினார்.

பட்டிமன்ற புகழ் ராஜா அவர்கள் குங்குமம் இதழில் எங்கள் குழு மிகவும் சிறப்பாக செய்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

வடிவுக்கரசி அம்மா அவர்கள் இப்போதும் என்னுடன் அவ்வப்போது தொலைப்பேசியில் அழைத்து பேசுவார்கள். அவர்கள் எப்போதாவது டென்ஷனாக இருந்தால் வெங்கடேஷ் ஏதாவது ஒரு காமெடி சொல்லேன் என்று உரிமையோடு கேட்பார்கள்.

ஒருமுறை வெளியூர் சென்றிருந்த நான் எனது மனைவிக்கு திடீர் உடல்நலக்குறைவு செய்தி கேட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கினேன். அங்கே வடிவுக்கரசி அம்மாவைப் பார்த்தேன். அப்போது அவரிடம் இந்த விஷயத்தை சொன்னபோது  “இந்த உலகத்தையே மகிழ்ச்சிபடுத்துற உங்களுக்கு எந்த ஒரு துன்பமும் வராது. தைரியமா வீட்டுக்கு போங்க” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறியதோடு மட்டுமல்லாமல் என் மனைவியிடமும் தொலைப்பேசியில் பேசி ஆறுதல் கூறினார்.

வடிவுக்கரசி அம்மாவை ‘பெண் நம்பியார்’ என்ற நான் குறிப்பிட்டதை, திரையில் இதுவரை யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தை சொன்னதாக மனம் திறந்து பாராட்டினார்.

கனல்கண்ணன், பட்டிமன்றம் புகழ் பாரதி பாஸ்கர், ஸ்ரீநாத், மதுமிதா, கவிஞர் விவேகா என பல நட்சத்திரங்கள் எங்கள் குழுவின் காமெடி கான்செப்ட்களைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.

செல்லியல்: மலேசியாவில் நிகழ்ச்சிகள்?

வெங்கடேஷ்: மலேசியாவில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் பிரியாத வரம் வேண்டும், ஊரெங்கும் தீபாவளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளேன். இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

செல்லியல்: சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு மாறியது எப்போது?

வெங்கடேஷ்: முதல் வாய்ப்பு கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் கிடைத்தது. அதன்பிறகு தொடர்ந்து வெடிகுண்டு முருகேசன், தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் ஆகியவற்றில் நடித்தேன்.

பிறகு கிறிஸ்டோபரும் நானும் போடிநாயகனூர் கணேசன், மதுரை சம்பவம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் நடித்தோம்.

கைவசம் இன்னும் நிறைய படங்கள் உள்ளன விரைவில் அவை வெளியாகும்.

இப்படியாக வெங்கடேஷ் மற்றும் கிறிஸ்டோபர் இருவரும் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர். யூடியூபில் இருக்கும் அத்தனை அசத்தப்போவது யாரு  எபிஸோடுகளையும் ஒரு மணி நேரத்தில் நேரடியாக பார்த்தது போன்ற உணர்வு கிடைத்தது.

இத்தனை திறமைகளையும், வித்தியாசமான யோசனைகளையும் கொண்டிருக்கும் இந்த அசத்தல் மன்னர்கள் திரைத்துறையில் மேலும் பல வெற்றிகளை அடைய செல்லியல் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு பிரியா விடை பெற்றோம்…

– பீனிக்ஸ்தாசன்