Home தொழில் நுட்பம் பரவும் வலைத்தள வதந்திகள்! மண்டேலா, ஜாக்கிசான் வரிசையில் தற்போது மிஸ்டர் பீன்!

பரவும் வலைத்தள வதந்திகள்! மண்டேலா, ஜாக்கிசான் வரிசையில் தற்போது மிஸ்டர் பீன்!

691
0
SHARE
Ad

social-media-networksநவம்பர் 20 -இன்று உலகளவில் நடக்கும் நிகழ்வுகளையும், சம்பவங்களையும் இணைய ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும் எந்த அளவிற்கு உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனவோ அதே அளவிற்கு சில விஷமிகளால் வதந்திகளும் வேகமாகப் பரவுகின்றன.

அதிலும் குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள் அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து உலகையே ஒரு வலம் வந்து விடுகின்றன.

இதில் கொடுமை என்னவென்றால், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலான மக்கள் நன்கு படித்தவர்களாகவே இருக்கின்றனர். அப்படி இருந்தும் ஒரு தகவலை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன்னர் அத்தகவல் உண்மையானதா என்பதை சோதித்துப் பார்க்கத் தவறுகின்றனர்.

#TamilSchoolmychoice

இதில், உலகின் பிரபல சினிமா நட்சத்திரங்கள், முக்கியப் பிரமுகர்கள் தான் பலிகடாவாக்கப்படுகின்றனர்.நெல்சன் மண்டேலா தொடங்கி ஜாக்கிசான், தற்போது மிஸ்டர் பீன் வரை உலகின் முக்கியப் பிரமுகர்கள் பலர் இது போன்ற வதந்திகளால் சாகடிப்பட்டிருக்கின்றனர்.

இப்படியாக, வளர்ந்து வரும் தொழிநுட்பங்களை சிலர் தவறாகப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்புகின்றனர்.

இந்த வதந்திகள் குறித்து ‘அசத்தப்போவது யார்’ புகழ் நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம் (படம்), தனது பேஸ்புக் வலைத்தளத்தில் இன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.1463570_664309446936452_1654964209_n

அதில், “அறிவியல் எவ்வளவு முன்னேறினாலும் நமது பழமையான சில விஷயங்களுக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்கிறோம். உதாரணம் கம்ப்யூட்டர் ஜோதிடம். நம் ஊரில் வதந்திகளை பரப்பி பீதிக்குள்ளாக்குவது வெகு நாளாக இருந்து வரும் பழக்கம்.தலையில்லா முண்டம், திருப்பதி கோவிலில் எருமை நுழைந்தது, அம்மன் தாலி அறுந்து விழுந்தது, சகோதரிகளுக்கு பச்சை சேலை போன்ற வதந்திகள் காட்டுத்தீயாக தமிழகத்தில் பரவியதை நீங்கள் அறிவீர்கள்.”

“கடந்த மாதம் வட இந்தியாவில் கூட்ட நெரிசலில் ஏராளமான பேர் பலியாக பாலம் இடியப் போகிறது என்ற வதந்தியே காரணமாக இருந்தது.வதந்திகள் கிராமத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் சென்னை போன்ற பெரு நகரங்களையும் ஆட்டிப்படைக்கும் என்பதற்கு, கடந்த ஆண்டு மருதாணி வைத்தவர்கள் மயங்கி விழுகிறார்கள் என்ற வதந்தி ஒரு உதாரணம்.வெறும் வாய் வழியாகப் பரவிய அக்கால வதந்திகள், வானொலி, டிவி, பத்திரிக்கைகள் வந்த பிறகு அதிவேகமாகப் பரவின.அதுவரை நடந்து சென்ற வதந்திகள் ஊடக பைக்கில் (Motor) விரைந்தன. பிறகு செல்போன் வந்த பிறகு வதந்திகளுக்கு கார் கிடைத்தது போல ஆயிற்று. இப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் வதந்திகளுக்கு விமானத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.”

“நெல்சன் மண்டேலா முதல் நடிகை கனகா, சல்மான் குர்ஷித் என்று செய்தியின் நம்பகத்தன்மையை சோதிக்காமல் நாமே அதை பரப்புகின்றோம் .இத்தனைக்கும், இன்று 24 மணி நேர செய்தி ஊடகங்கள், இணையத்தளங்கள் என்று அந்த செய்தியை சில நிமிடங்களில் உறுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருந்தும் அதை நாம் உறுதி படுத்துவதில்லை.”

“விஞ்ஞான வளர்ச்சியை நாம் வதந்திகளைப் பரப்ப உபயோகித்துக் கொள்கிறோமோ என்ற அச்சத்தை விட இதை பயங்கரவாதிகள் உபயோகித்துவிடக் கூடாது என்ற அச்சமே முன் நிற்கிறது. ஏனெனில், ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தால் சில நூறு உயிர்களை பலி வாங்க முடியும் என்றால் வதந்தியால் பல கோடி உயிர்களை திட்டமிட்டு அழிக்கும் அபாயம் ஒளிந்து இருக்கிறது.”

“ஒரு வதந்தி பரவ அதில் நம் பங்களிப்பும் இருக்கிறது.ஆகவே ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தி கொண்டு தான் பதிவிடுவோம் என்றும், நம்பகத்தன்மை இல்லாத செய்திகளை புறக்கணிப்போம் என்றும் உறுதிமொழி எடுப்போம்.மெய்ப்பொருள் காண்பதறிவு” என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

எனவே சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு முன்னர் அந்தத் தகவல் உண்மையானதா என்பதை சோதித்த பின்னர் பகிர்வது நமது கடமையாகும். இதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாமே! சிந்தித்துப் பாருங்கள்!

– பீனிக்ஸ்தாசன்