Home இந்தியா அவசரமாக கூடுகிறது தமிழக சட்டசபை: மத்திய அரசுக்கு கண்டனம்?

அவசரமாக கூடுகிறது தமிழக சட்டசபை: மத்திய அரசுக்கு கண்டனம்?

457
0
SHARE
Ad

komenwealth 300-200

நவம்பர் 12- இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளும்’ என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழக சட்ட சபை இன்று மாலை அவசரமாக கூடுகிறது.

கடந்த மாதம் 24ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதால் இன்றைய அவசரக் கூட்டத்தில் ‘கடுமையான வார்த்தைகள்’ அடங்கிய கண்டன தீர்மானம் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் எனத் தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ‘பிரதமர் பங்கேற்கக் கூடாது’ என ஒட்டுமொத்த தமிழக கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தின. காங்கிரஸ் கட்சியிலும் பிரதமருக்கு எதிர்ப்பு கிளம்பியது.தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி போன்ற மூத்த அமைச்சர்களும் ‘இலங்கை மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும்’ என கூறினர். கடந்த மாதம்  24ம் தேதி  தமிழக சட்டசபையில்  இந்த விவகாரம் தொடர்பாக  ஒரு தீர்மானம் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் ஆதரவுடன், அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து, அந்நாட்டில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.

இந்தியாவின் சார்பில் பிரதமரோ, பிரதிநிதிகளோ கலந்து கொள்ளக் கூடாது. இலங்கை மீதான போர் குற்றச்சாட்டை விசாரிக்கும் வரை அந்நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்’ என அந்த தீர்மானம் வலியுறுத்தியது. இதை அடுத்து, ‘இலங்கை தலைநகர் கொழும்பில் இம்மாதம் 15ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார்; இந்தியாவின் சார்பில், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்பார்’ என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவும் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

‘பிரதமர் பங்கேற்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும், குர்ஷித் கலந்து கொள்வது விவாதத்துக்குரியது’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.’இந்தியாவின் சார்பில், ஒரு துரும்பு கூட இலங்கை மாநாட்டுக்கு செல்லக் கூடாது’ என ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வைகோ உள்ளிட்ட தமிழக கட்சி தலைவர்கள், குர்ஷித் செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எதிராக மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. சட்டசபை தீர்மானத்தையும் தமிழக மக்கள் பலரின் உணர்வையும் மதிக்காமல் எடுக்கப்பட்டு உள்ள இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ஆளும் கட்சி தரப்பில் விரும்புவதாக கூறப்படுகிறது.

இதில் முடிவு எடுப்பதற்கு முன், தமிழக அரசின் கருத்தை கேட்க கூட மத்திய அரசு முன்வரவில்லை. தன்னிச்சையாக செயல்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவே ஆளும் கட்சி வட்டாரம் கருதுகிறது. அதற்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும் எனவும் ஆளும் கட்சி விரும்புகிறது. அதுபற்றி விவாதிப்பதற்கும் தீர்மானிப்பதற்கும் தமிழக சட்டசபையை அவசரமாக கூட்டியுள்ளனர்.அதன்படி இன்று மாலை 6:00 மணிக்கு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடக்கிறது.

முந்தைய தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், இன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்குமா; பிரதமர் செல்லாதது ஆறுதல் அளிக்கிறது என கருத்து கூறியுள்ள தி.மு.க.,வும், மத்திய அரசை விமர்சித்து கடுமையான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டால் அதை ஏற்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும்,தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டம் இன்று மாலை 6:00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் நடைபெறும்’ என, சட்டசபை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். நேற்று, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் வந்த பின்  அவசரமாக சட்டசபை கூட்டத்தை கூட்டுவது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் குறித்த தகவல் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.