Home Uncategorized செல்லினம் பதிகை 2

செல்லினம் பதிகை 2

612
0
SHARE
Ad

நவம்பர் 14 – செல்பேசிகளின் மூலமாக பிரபல வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் தமிழை எழுத, இன்று உலகின் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு செயலி (aps)  ‘செல்லினம்’.

மிக அழகான தமிழ் எழுத்துருக்களையும், எளிதில் தமிழை உள்ளிடத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு நிறைவதற்குள், புதிய வசதிகளுடன் கூடிய தனது இரண்டாவது பதிகையை (version 2.0) வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வசதிகளில் குறிப்பாக சொற்பிழை திருத்தம்(Auto Correction) செல்லினம் பயனர்களை மிகவும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காரணம் வேறு எந்த ஒரு தமிழ் உள்ளிடு செயலியும் தராத ஒரு வசதியை செல்லினம் கொடுப்பது தான் அதன் தனிச் சிறப்பு.

#TamilSchoolmychoice

சொற்பிழை திருத்தத்தில் அப்படி என்னதான் சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம்.. செல்லினத்தை தினசரி வாழ்வில் ஒரு அங்கமாகப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் வசதியின் அருமையை நன்கு அறிவார்கள்.

செல்லினத்தை புதிதாக பதிவிறக்கம் செய்பவர்களுக்காக சொற்பிழை திருத்தத்தின் சிறப்பை விளக்குவோம்..

சொற்பிழை திருத்தம் (Auto correction)

தமிழில் தட்டச்சு செய்யும் போது சில வார்த்தைகளில் நமக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு தானாகவே சரியான தீர்வை கொண்டு வந்து கொடுக்கிறது செல்லினம்.

உதாரணமாக, அஞ்சல் விசைப்பலகையில் நீங்கள் ‘ILAMAI’ என்று தட்டச்சு செய்வதாக வைத்துக்கொள்வோம் அதை தமிழ் எழுத்துருக்களாக ‘இலமை’, ‘இளமை’ என்று இரண்டு வார்த்தைகளைக் காட்டும். அத்துடன் அதில் சரியான வார்த்தை ‘இளமை’ தான் என்பதையும் இந்த செயலி நீல நிறக் குறியீடு மூலம் உங்களுக்கு தெரிவிக்கின்றது.

தவறுதலாக அதையும் நீங்கள் கவனிக்காமல் அடுத்த வார்த்தையை எழுத நினைத்து ‘SPACE’ ஐ அழுத்தினாலும் கூட, தானாகவே ‘இளமை’ என்ற சரியான வார்த்தையை உங்களுக்கு கொடுத்து உங்களின் சொற்பிழையை நீக்குகின்றது.

நம்மில் இன்னும் எத்தனையோ பேர்  ‘வாழ்த்துகள்’ என்பதற்குப் பதிலாக தவறாக ‘வாழ்த்துக்கள்’ என்று ‘க்’ சேர்த்து எழுதி வருகின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? இது போன்ற குழப்பங்களுக்கு செல்லினம் சரியான தீர்வைத் தருகின்றது.

அடடா! இதைத் தானே இவ்வளவு நாட்கள் தேடிக் கொண்டிருந்தேன் என்று நினைப்பவர்கள், செல்லினத்தை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழுங்கள்.

சொற்பிழை தவிர வேறு என்ன சிறப்புகள் உள்ளன என்று கேட்பவர்களுக்காகவே இன்னும் இரண்டு கூடுதல் வசதிகளை செல்லினம் அளிக்கின்றது.

எண்களை நேரடியாக உள்ளிடலாம் (long press for numbers)

ஒருவருக்கு உடனடியாக ஒரு தகவலைப் பகிர விரும்புகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் தமிழில் எழுத நினைக்கின்றீர்கள். அப்படி எழுதிக் கொண்டிருக்கும் போது எண்கள் சிலவற்றையும் நீங்கள் குறிப்பிட்டாக வேண்டும் என்ற நிலை. இதற்கு முன்பு என்ன செய்வோம்? விசைப்பலகையில் எண்களுக்கான விசைகளை மாற்றி அதில் குறிப்பிட்ட எண்களை தட்டச்சு செய்து பிறகு மீண்டும் தமிழுக்கான விசைப்பலகையை  தேர்வு செய்வோம்.

இப்போது உங்களுக்கு அந்த கஷ்டத்தையும் செல்லினம் கொடுக்க விரும்பவில்லை. தமிழ் எழுத்துக்களின் மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களின் மீது ஒரு நீண்ட அழுத்தம் (Long Press) கொடுத்தால் போதும் அந்த எண் உங்கள் தகவலுடன் சேர்ந்து கொள்ளும்.

உதாரணமாக, ‘9’ என்ற எண்ணை அழுத்த வேண்டும் என்றால் முன்பு போல் விசைப்பலகைக்குச் சென்று மாற்றத் தேவையில்லை.  ‘ண’ என்ற எழுத்திற்கு மேல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘9’ என்ற விசையின் மீது ஒரு நீண்ட அழுத்தம் கொடுத்தால் போதும். ஒருமுறை அழுத்தினால் ‘ண’ என்ற எழுத்தும், நீண்ட அழுத்தம் கொடுத்தால் ‘9’ என்ற எழுத்தையும் பெறலாம்.

அதிகரிக்கப்பட்ட பரிந்துரைகள் (extended suggestions list)

‘எள் என்றால் எண்ணெயாக வந்து நிற்பான்’ என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கூறுவார்கள். வேகத்திற்கும், புத்திசாலித்தனத்திற்கும் உதாரணமாக இந்த வாக்கியம் கூறப்படுகின்றது. அது போல் செல்லினம் நீங்கள் எழுதும் தமிழ் எழுத்துக்களை உள்வாங்கி அடுத்து என்ன எழுத்தப்போகிறீர்கள் என்பதையும் ஊகித்து உங்களுக்கு சம்பந்தப்பட்ட வார்த்தைகளைப் பரிந்துரைக்கின்றது.

உதாரணமாக கணி என்று நீங்கள் தட்டச்சு செய்தீர்களானால், அதற்கு தொடர்பான 20 திற்கும் மேற்பட்ட வார்த்தைகளை பரிந்துரை செய்து உங்களது நேரத்தை மிச்சப்படுத்துகின்றது.

கணி என்று தட்டச்சு செய்து விட்டு வலது ஓரத்தில் இருக்கும் கீழ் நோக்கிய குறியீட்டை(Down Arrow) அழுத்தினால் போதும் ‘கணினி’, ‘கணிதம்’,‘கணிப்பு’ என்று 20 வார்த்தைகளுக்கும் மேல் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும். அதில் தேவையான வார்த்தையை நீங்கள் தேர்வு செய்யலாம்.

தமிழை எளிதில் உள்ளிட தொழில்நுட்பம் என்னவெல்லாம் வசதிகளை நமக்கு செய்து கொடுக்கிறது என்று பாருங்கள்!

பயனர்கள் செல்லினத்தை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கும் போது மேலும் பல ஆச்சர்யமான வசதிகளை செல்லினம் செய்யத் தயாராக உள்ளது என்று அதன் தொழில்நுட்ப வடிவமைப்பாளரான முத்துநெடுமாறன் அவர்கள் உறுதியளித்திருக்கின்றார்.

சரி… இத்தனை வசதிகளைக் கொண்ட இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்ய அதிக விலை கொடுக்க வேண்டுமோ என்று எண்ண வேண்டாம்..

சொன்னால் நம்ப மாட்டீர்கள்!.. செல்லினம் தற்போது வரை இலவசமாக மட்டுமே வழங்கப்படுகின்றது.

அப்புறம் என்ன? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான்…. ஆண்டிராய்டு, ஆப்பிள் திறன்பேசிகளை வைத்துள்ளவர்கள் உடனடியாக கூகுள் பிளேவுக்கு சென்று தேடலில் ‘Sellinam’ என்று தட்டச்சு செய்தால் போது உங்களுக்கு செல்லினம் எளிதில் கிடைக்கும். அதில் பதிவிறக்கம் செய்யலாம்.

Sellinam 2.o version – ஆண்டிராய்டு பயனர்களுக்கு மட்டுமே! விரைவில் ஆப்பிள் பயனர்களுக்கும் செல்லினம் 2.0 வழங்கப்படும் என்றும் முத்து நெடுமாறன் அறிவித்திருக்கின்றார்.

அத்துடன், உங்களுக்கு நாட்டு நடப்பு, அரசியல், சினிமா, உலகம், தொழிநுட்பம், வணிகம் என்று செய்திகளை வழங்கும் நமது ‘செல்லியல்’ செயலியையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செல்லினத்தைப் புதிதாகப் பதிவிறக்கம் செய்தவர்களும், செல்லினத்தை ஏற்கனவே பதிவு செய்து பயன்படுத்தி வருபவர்களும் தவறாமல் உங்களது கருத்துக்களை கூகுள் பிளே விலும், செல்லினத்தின் பேஸ்புக் பக்கத்திற்கும் சென்று உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும். அதே நேரத்தில் செல்லினம் குறித்த உங்களது சந்தேகங்களுக்கும் அங்கு தீர்வு கிடைக்கும்.

சிறந்த கருத்துக்கள் ‘செல்லியல்’ ல் செல்லினம் குறித்த செய்திகளில் இடம்பெறும்.

செல்லினம் மற்றும் செல்லியலின் பேஸ்புக் பக்கத்தை அடைய கீழ்க்காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்.

செல்லினம் – https://www.facebook.com/sellinam

செல்லியல் – https://www.facebook.com/selliyal