Home உலகம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா செல்வாக்கு சரிவு: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா செல்வாக்கு சரிவு: கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்

445
0
SHARE
Ad

OBAMA-300-200

வாஷிங்டன், நவம்பர் 14 – அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒபாமா (வயது 52). ஆனால் சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிவு கண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒபாமாவின் தற்போதைய செல்வாக்கு நிலவரம் எப்படி என்பது குறித்து அங்குள்ள குயின்னிபியாக் பல்கலைக்கழகம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. நாடு முழுவதும் கடந்த 6-ந் தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடந்த கணக்கெடுப்பில் 2,545 பதிவு செய்த வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒபாமாவின் செல்வாக்கு தடாலடியாக சரிவு கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 54 சதவீதம் பேர் ஒபாமாவின் பணிகளை ஏற்கவில்லை. 39 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் பணிகளில் திருப்தி தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் சரிவு, இதே காலக்கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசு கட்சி தலைவருமான ஜார்ஜ் புஷ் கண்ட சரிவுக்கு சமமாக அமைந்துள்ளது என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி எடுத்த கணக்கெடுப்பில் ஒபாமாவுக்கு எதிராக 49 சதவீதம் பேரும், ஆதரவாக 45 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஒரே மாதத்தில் சரிவு மேலும் அதிகரித்து உள்ளது. ஒபாமா கேர் என்னும் காப்பீடு திட்டத்தை ஒபாமாவால் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது அவருக்கு பின்னடைவை தேடித்தந்துள்ளது.

கருத்துக்கணிப்பினை நடத்திய குயின்னிபியாக் பல்கலைக்கழகத்தின் ஓட்டுப்பதிவு நிறுவனத்தின் துணை இயக்குனர் டிம் மல்லாய் கருத்து கூறுகையில், “பிற அனைத்து புதிய ஜனாதிபதிகளைப் போலவே ஒபாமாவும் அமெரிக்க வாக்காளர்களிடம் தேனிலவு காலத்தை பெற்றிருந்தார்.

அதனால்தான் அவரை 50 சதவீதத்துக்கும் மேலான வாக்காளர்கள் ஏற்றிருந்தனர். இப்போது நிலைமை மாறிவிட்டது. இதுவரை 40 சதவீதத்துக்கும் மேலான மக்களின் ஆதரவை ஒபாமா பெற்றிருந்தார். இப்போதுதான் முதல் முறையாக அது 39 சதவீதத்துக்கு வந்துள்ளது” என்றார்.

பெண்களிடத்திலும் ஒபாமா செல்வாக்கு சரிந்துள்ளது. ஒபாமாவுக்கு 41 சதவீதம் பேர் ஆதரவாகவும், 51 சதவீதம் பேர் எதிராகவும் கருத்து கூறி உள்ளனர். ஒபாமா கேர் காப்பீடு திட்டத்தை ஒபாமா நிறைவேற்றுவாரா என்பதில் அமெரிக்க மக்களிடம் அவநம்பிக்கை நிலவுவதையே கருத்துக்கணிப்பு எதிரொலிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க மக்கள் தற்போது தாங்கள் வைத்துள்ள காப்பீட்டு திட்டங்களை அவர்கள் விரும்பினால் தொடரலாம் என்று ஒபாமா கூறியது, அவருக்கு எதிராக அமெரிக்க மக்களை திரும்ப வைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன