ஜெனிவா, நவம்பர் 15- ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரில் அரிய வகை வைரங்களின் ஏலம் நடைபெற்றது.
59.60 கேரட் எடை கொண்ட ‘பிங்க் ஸ்டார்’ என்றழைக்கப்படும் இந்த அரியவகை வெளிர்சிகப்பு நிற வைரம் சுமார் 6 கோடி அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் போகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பை முறியடித்து 8.3 கோடி அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் 26 கோடியே 56 லட்சம் மலேசியா வெள்ளி) இந்த வைரம் விற்பனையானது.
தொடக்க விலையாக சுவிட்சர்லாந்து நாட்டு ‘பிராங்க்’கில் 48 மில்லியன் பிராங்காக ஏலம் போன இந்த வைரத்தின் விலை படிப்படியாக 10 லட்சம் பிராங்குகளாக உயர்ந்தது. இறுதியாக 6.7 கோடி பிராங்குகளுக்கு (8.3 கோடி அமெரிக்க டாலர்) ஏலம் முடிவடைந்தது.
தனது பெயர், இருப்பிடம் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்துவிட்ட ஏலம் எடுத்த நபர், வேறொருவர் சார்பாக இந்த ஏலத்தில் பங்கேற்றதாக தெரிவித்தார்.