நவம்பர் 15 – திகில், மர்மம், கதையில் எதிர்பாராத திருப்பம் என்று சென்ற வருடம் ஒரு கலக்கு கலக்கிய படமான பீட்சாவின் இரண்டாவது பாகம் தான் வில்லா – பீட்சா 2.
‘சூது கவ்வும்’ படத்தில் நடித்த அசோக் செல்வன் கதாநாயகனாகவும், சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்க தீபன் சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார்.
இவர்கள் தவிர, நாசர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் வருகிறார். மற்ற நேரங்களில் அவருடைய புகைப்படம் தான் நடித்திருக்கிறது.
மற்றபடி, பீட்சா போன்று திகில், மர்மம், எதிர்பாராத திருப்பம் என்று ‘வில்லா’ வேறு கதைக்களத்தில் பயணித்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு இறுதிக் காட்சிகளில் குழப்பங்களே மிஞ்சுகிறது.
படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடையில் எழுந்து போய் தம் அடிப்பவர்கள், பாப் கார்ன் வாங்கி வருபவர்கள், பாட்டு வரும் போது ஒரு குட்டித் தூக்கம் போடுபவர்கள் கவனிக்க வேண்டும்.
கொஞ்சம் நீங்கள் அசந்தாலும், படம் புரியாமல் “என்னாச்சு … பாண்டிச்சேரியில் ஒரு பங்களா … ஹீரோ அங்க போனாரு … அப்புறம் என்னாச்சு” என்று நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாமல் முழிப்பீர்கள். ஜாக்கிரதை!
கதைச் சுருக்கம்
கதைப்படி நாசர் ஒரு பிரபல ஓவியர். அவரது மகன் அசோக் செல்வன் (ஜெபின்) ஒரு வளரத் துடிக்கும் நாவலாசிரியர். சிறுவயதிலேயே ஒரு விபத்தில் தாயை இழந்தவர். அப்பாவின் கட்டுப்பாட்டில் வளரும் ஜெபின், அவரின் விருப்பத்திற்கு இணங்கி தொழில் செய்து நஷ்டத்தை அடைகிறார்.
நாசர் உடல்நலக்குறைவால் இறந்துவிட செய்வதறியாது தவிக்கிறார் ஜெபின்.தனது நாவலை வெளியிட யாராவது முன் வர மாட்டார்களா என்று ஏங்குகிறார்.
ஜெபினின் காதலி ஆர்த்தி (சஞ்சனா) ஒரு ஒவியக் கல்லூரி மாணவி. ஜெபினுக்கு ஆறுதலாக இருக்கிறார்.
அந்த சமயத்தில், தன் அப்பா தனக்காக பாண்டிச்சேரியில் வாங்கி வைத்திருக்கும் ஒரு ஆடம்பர மாளிகை (வில்லா) பற்றி குடும்ப வழக்கறிஞர் மூலமாக ஜெபினுக்குத் தெரியவருகிறது.
சந்தோஷத்துடன் அங்கு செல்லும் ஜெபின் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்? அந்த மாளிகையில் நடக்கும் அமானுஷ்யங்கள் என்ன? அங்கிருக்கும் ஓவியங்களுக்கும் அவரது வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? தனது நாவலை வெளியிட்டாரா? காதலியைக் கரம் பிடித்தாரா போன்ற கேள்விகளுக்கு படத்தின் இரண்டாவது பாதி பதில் சொல்கிறது.
படத்தின் பலம்
இரண்டரை மணி நேரங்கள் படத்தை ஓட்டியே ஆகவேண்டும் என்று திரைக்கதையை ஜவ்வாக இழுக்காமல் ஆங்கிலப் படங்களைப் போல் சுருக்கமாக 1 மணிநேரம் 42 நிமிடங்களில் படத்தை முடித்திருக்கும் இயக்குனர் தீபனுக்கு பாராட்டுக்களைக் கூறவேண்டும்.
மாளிகையைச் சுற்றியே கதை நகர்ந்தாலும், படம் பார்ப்பவர்களைத் திகிலூட்டும் வகையில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தீபக் குமார்பதி
பீட்சாவின் தீம் இசையையும் சேர்த்து காட்சிகளுக்கு ஏற்றவாறு அதிரடி இசையை வழங்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
நாசர் சில நிமிடங்கள் தோன்றினாலும் ஒரு அனுபவ நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதே போன்று படத்தில் பொன்ராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் புதுமுக நடிகர் ஒருவர் மனதில் நிற்கிறார்.
சூது கவ்வும் படத்தில் கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களைக் கவ்விய சஞ்சனா, சொகுசு மாளிகை, பாண்டிச்சேரி உட்பட கவர்ச்சிக் காட்சிகளைச் சேர்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தும் கூட ஒரு இடத்தில கூட முகம் சுளிக்கும் படியான காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படம் எடுக்கப்பட்டிருப்பது ஆச்சர்யம்.
படத்தின் பலவீனம்
ஓவியங்களில் இருக்கும் நபர்கள் யார் யார் என்று சரியாகத் தெரியாத நிலையிலும், கார் விபத்து நடப்பது போன்ற ஓவியத்தை வைத்து தன் அம்மா என்று கணிக்கும் ஜெபின்.
ஒருவர் மருத்துவமனையில் இருப்பது போல் இருக்கும் ஓவியத்தை வைத்து நோய்வாய்ப்பட்டு இறந்து போன தன் அப்பா என்று தானே கணித்திருக்க வேண்டும்? ஆனால் இது யாருன்னு தெரியலையே என்று சஞ்சனாவிடம் கூறுகிறார் ஜெபின்.
அந்த காட்சிகளைப் பார்க்கும் நமக்கு, கதைக்காகத் தான் ஜெபின் அப்படி கூறுகிறார் என்பது தெளிவாகத் தெரியும்.
அவ்வளவு பெரிய பங்களா இருக்கும் அந்த இடம் ஒரு ஆள் அரவமற்ற பகுதியாகவே முதலில் காட்டப்படுகிறது.
ஆனால் நாய் இறந்து கிடந்து துர்நாற்றம் அடிக்கும் போதும், நண்பரின் காலில் அடிப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது போல் அங்கு எப்படி அத்தனை பேர் வந்தார்கள்?
பொன்ராஜையும் அவரது குடும்பத்தினரையும் அவரது சகோதரரே கொல்லப்போகிறார் என்று தெரிந்த ஜெபின், நினைத்திருந்தால் பொன்ராஜிடம் அதை விளக்கமாக எடுத்து கூறி அவரைக் காப்பாற்றி இருக்கலாமே?
கடைசிவரை நாசர் நல்லவரா கெட்டவரா என்றே தெரியவில்லை…
தன் காதலியை தானே குத்திக் கொல்வது போன்ற ஓவியம் ஒன்று இருந்ததே அந்த சம்பவம் நிஜவாழ்வில் நடந்ததா? இல்லையா? என்று படம் பார்த்தவர்கள் வீடு வந்து சேரும் வரை படத்தின் கிளைமாக்ஸை நினைத்து குழப்பிக் கொண்டே இருக்கும் படி இறுதிக் காட்சிகளில் அப்படி ஒரு குழப்பம்.
மொத்தத்தில் வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!
– பீனிக்ஸ்தாசன்