பினாங்கு, பிப்ரவரி 11 – சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன வாக்காளர்களை முழுமையாக கவர்வதற்கு திட்டமிட்டுள்ள பிரதமர் நஜிப் துன் ரசாக், முதல் கட்டமாக எதிர்க்கட்சிகளின் கோட்டையான பினாங்கில் தற்போது முகாமிட்டுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக பினாங்கு சென்று சேர்ந்துள்ள பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றார்.
ஜாலான் கப்பித்தான் கிளிங் என்ற இடத்திலுள்ள “நாசி கண்டார் பெராத்துர்” என்ற புகழ் பெற்ற இந்திய முஸ்லிம் உணவகத்திற்கு தனது துணைவியார், மகள் நூர்யானா நஜ்வா, மகன் அஷ்மான் ரசாக் ஆகியோருடன் வருகை தந்து உணவருந்தி மகிழ்ந்தார். அவருடைய வருங்கால மருமகன் டானியார் நாசார்பெயவ்வும் அவர்களுடன் உடனிருந்தார்.
சீன சமூகத் தலைவர்களுடன் தேநீர் விருந்து
நேற்று பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 5 மணியளவில் சீன சமூகத் தலைவர்களை நஜிப் சந்தித்து அளவளாவினார். சுமார் 1 மணி நேரம் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட நஜிப்புடன் பிரதமர் துறை அமைச்சர் டான்ஸ்ரீ முகமட் யாக்கோப், பினாங்கு தேசிய முன்னணி தலைவர் தெங் சாங் யோவ், பினாங்கு அம்னோ தலைவர் டத்தோ சைனால் அபிடின் ஒஸ்மான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில மக்களுடன் முதன் முறையாக சீனப் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமருக்கு வரிசையாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சூறாவளி சுற்றுப் பயணம் மூலம் எதிர்க்கட்சிகளின் கோட்டையாகத் திகழும் பினாங்கு மாநிலத்தின் பெரும்பான்மை வாக்காளர்களான சீனர்களைக் கவர்வதற்கு பிரதமர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.