ஜோகனஸ்பார்க், நவ 19–தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
தென்ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95). கறுப்பர் இன தலைவரான இவர் இனவெறிக்கு எதிராக போராடினார். அதனால் அவர் 29 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். எனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு நுரையீரலில் தொற்று நோய் பாதித்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதற்காக சிகிச்சை பெற்ற அவர் கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.
அதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து ஹங்க்டன் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா அதிபர் ஜேகப்ப ஜுமா நேற்று மண்டேலா வீட்டுக்கு சென்று அவரை பார்த்தார்.
மருத்துவர்களிடமும், குடும்பத்தினர்களிடமும் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நெல்சன் மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தார்.