லண்டன், நவ 20- இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று ஈரானிய அதிபர் ஹசன் ருஹானியுடன் தொலைபேசியில் உரையாடல் நடத்தினார். இங்கிலாந்தின் பிரதமர் ஒருவர் ஈரானிய அதிபரை அழைத்துப் பேசுவது கடந்த பத்து வருடங்களில் இதுவே முதன்முறையாகும் என்று இங்கிலாந்து பிரதமரின் அலுவலகத்தில் கூறப்பட்டது.
இவர்கள் இருவரும் வரவிருக்கும் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள், சிரியாவின் பிரச்சினைகள் மற்றும் இங்கிலாந்து, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் மேம்பாடு குறித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011 ஆம் ஆண்டில் ஈரானிய எதிர்ப்பாளர்கள் அந்நாட்டின் பிரிட்டிஷ் தூதரகத்தின்மீது தாக்குதல் நடத்தியதால் இருநாட்டின் தூதரக செயல்பாடுகளும் துண்டிக்கப்பட்டன. இதனை மீண்டும் தொடர்வது குறித்தும், தூதுவர்களை நியமிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இரண்டு நாடுகளிலும் குடியுரிமை இல்லாதவருக்கான பொறுப்பு அலுவலர்கள் சென்ற வாரம் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மற்ற செயல்பாடுகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்த அளவில் சமீபத்திய ஜெனிவா மாநாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளதை இருவருமே ஒப்புக்கொண்டனர்.
மேலும், இன்று தொடங்க இருக்கும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டியது முக்கியம் என்று இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக வெளிப்படைத்தன்மையுடன் ஈரான் தங்களது அணுசக்தித் திட்டம் குறித்த சர்வதேச சமூகத்தினரின் கவலைகளை தெளிவு படுத்தவேண்டும் என்று கேமரூன் கருத்து தெரிவித்துள்ளார்.
சிரியாவின் பிரச்சினையிலும், தொடரும் உயிர்ப்பலிகளை முடிவுக்குக் கொண்டுவர ஒரு அரசியல் தீர்வு தேவை என்பதை இருவருமே குறிப்பிட்டுள்ளனர் என்று பிரதமர் கேமரூன் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.