நவம்பர் 22 – தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டது என்பதற்கு ‘இரண்டாம் உலகம்’ படம் ஒரு முன்னுதாரணம். காலங்காலமாக தமிழ் சினிமாவில் காதலை எத்தனையோ வழிகளில் காட்டியாகிவிட்டது இனி புதுமையாக இன்னொரு உலகிற்கு சென்று காட்டுவோம் என்ற கற்பனையில் இப்படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன்.
ஆனால் அவரது சிந்தனையைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் இரண்டாம் உலகத்தை அடையத் தயாராகிவிட்டார்களா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
வித்தியாசமான கதை வேண்டும், புதுமை வேண்டும் என்று தமிழ் சினிமா இயக்குநர்களைப் பார்த்து புலம்பித் தீர்த்த ரசிகர்களுக்காகவே , “இதோ இது தான் எனது படைப்பு… இது பிடிக்குதா என்று பாருங்கள்” என்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ கொடுத்த அதே திமிரோடும், தைரியத்தோடும் ‘இரண்டாம் உலகம்’ கொடுத்துள்ள செல்வராகவனை நிச்சயம் பாராட்ட வேண்டும்.அதே நேரத்தில், தனது வித்தியாசமான சிந்தனைகளை படமாக்கும்போது ரசிகர்களுக்கு அதை புரியவைப்பதிலும் செல்வராகவன் அக்கறை காட்ட வேண்டும்.
அந்த வகையில், வித்தியாசமான கதை வேண்டி அலையும் சினிமா ரசிகர்களுக்கு ‘இரண்டாம் உலகம்’ நிச்சயம் நல்ல விருந்து…
கதைச் சுருக்கம்
இரண்டு உலகம் – இரண்டு கதைகள் – இரண்டிலும் காதல்…
முதல் உலகத்தில் தொடங்கும் கதையில், ஆர்யாவும், அனுஷ்காவும் சண்டையிட்டு பின் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு காதலிக்கத் தொடங்கும் சமயம் அனுஷ்கா இறந்து போகிறார்.
வழக்கமாக காதலி இறந்து போனவுடன் காதலனும் தற்கொலை செய்து கொள்வான் அல்லது பைத்தியமாக அலைவான். இது தான் வழக்கமாகத் தமிழ் சினிமா சொல்லும் பாணி. அதை சற்றே மாற்றி, கதை அவனை வேறு உலகத்திற்கு கொண்டு சென்றால் என்ன ஆகும்?
இன்னும் காதலே பிறக்காத அந்த உலகத்தில் இவனால் காதல் பிறந்தால் என்ன நடக்கும்?
அது தான் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் கதை…
என்ன குழப்பமாக இருக்கிறதா? கவலையே வேண்டாம்! படம் பார்த்த நிறைய பேர், என்ன கதை? என்று இன்னும் குழம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
தொழில்நுட்பம்
முக்கால்வாசி படமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கொண்டு தான் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கையாகத் தெரியாமல் வண்ணமயமாக ஒரு புது உலகத்திற்கு சென்று பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக அவ்வப்போது வித்தியாசமான பறவைகள் வானத்தில் பறந்து கொண்டிருப்பது போலவும், வேறு கிரகங்கள் மிக அருகே இருப்பது போலவும் காட்டியிருப்பது சிறப்பு.
ஆர்யா சிங்கத்துடன் சண்டையிடுவது போல் காட்டியிருக்கும் காட்சியிலும், அனுஷ்கா மிருகத்துடன் சண்டையிடும் காட்சியிலும் அது ‘கிராபிக்ஸ்’ என்று தெரிவதால் நமக்கு பிரமிப்பு குறைகிறது.
மற்றபடி, பனிப்பொழிவு, பூக்கள் மலர்வது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
அனுஷ்காவிற்கு 32 வயதாகிவிட்டது என்பதை அவரது முதிர்ச்சியான முகமும், உடலும் மேக்கப்பையும் மீறி காட்டிக்கொடுக்கிறது.
தோழிகளுடன் ஒன்றாக நிற்கும் காட்சிகளில் அனுஷ்காவிற்கு முன்னாள் அவர்கள் அனைவரும் கோழிக் குஞ்சுகள் போல் தெரிகிறார்கள்.
எங்கே நமீதா போல் அனுஷ்காவும் ஆகிவிடுவாரோ என்று அவரது ரசிகர்கள் கவலைப்படப் போவது நிச்சயம்.
ஆனாலும் இரண்டாம் உலகத்தில் ‘வர்ணா’ கதாப்பாத்திரத்தில் வாழ்கிறார்.
ஆர்யா தனது வழக்கமான, கலகலப்பான அப்பாவி நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனாலும் இயக்குநரின் சொல் பேச்சை மீறாத செல்லப்பிள்ளையாக ஆர்யா இருப்பதால்,அவருக்கும் ஒரு சோடாபுட்டி கண்ணாடியை மாட்டிவிட்டு, காதல் கொண்டேன் தனுஷையும், 7G ரெயின்போ காலனி ரவிக்கிருஷ்ணாவையும் அவ்வப்போது நினைவு படுத்துகிறார் செல்வா.
ஆர்யா, அனுஷ்காவைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக நடிகர்கள் இல்லை. ஆர்யாவின் தந்தை கதாப்பாத்திரம், கடவுளாகக் கருதப்படும் வெள்ளைக்காரப் பெண், அனுஷ்காவின் தோழி ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இசை
இரண்டாம் உலகம் படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜும், பின்னணிக்கு அனிருத்தும் இசையமைத்திருக்கிறார்கள். ‘என் காதல் தீ’, ‘மன்னவனே’, விண்ணைத் தாண்டி போன்ற பாடல்கள் மனதில் நிற்கின்றன. பாடல்கள் அனைத்தும் தனியாகத் தெரியாமல் கதையோடு சேர்ந்து வருகின்றன.
படத்தில் நம்மை ஈர்ப்பவை
“இந்த உலகம் காதலுக்காக மட்டும் தான் அசைந்து கொடுக்கும்- நீ உண்மையா காதலிச்சா அவளை நீ எங்க வேணாலும், எப்ப வேணாலும் பாக்கலாம்” – வசனம்…
“நான் யாருக்கும் அடிமையா இருக்க மாட்டேன்” என்று கூறி கணவனுக்காக கண்கள் கலங்கும் இடங்களில் அனுஷ்காவின் நடிப்பு…
அப்பாவியாக அனுஷ்காவிடம் கெஞ்சுவதாக இருக்கட்டும், மல்யுத்த வீரன் போல் கட்டுடலோடு சண்டையிடும் இடங்களாகட்டும் ஆர்யா மிரட்டல்…
வசனங்கள் எதுவும் இல்லையென்றாலும், அமைதியான முகத்துடன் கடவுளாகவே தெரியும் வெள்ளைக்காரப் பெண்…
“மச்சான் கிடைச்ச வாய்ப்பை விட்டுட்டியே டா… எனக்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா?” – பதட்டத்துடன் கேட்கும் ஆர்யாவின் நண்பர் ..
மொத்தத்தில் ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’ ஆனால் ரசிகர்கள் தான் அதை அனுபவிக்கத் தயாராக வேண்டும்.
– பீனிக்ஸ்தாசன்
‘இரண்டாம் உலகம்’ படத்தின் முன்னோட்டத்தினை கீழ்காணும் இணைய வழித் தொடர்பின் மூலம் காணலாம்..