சென்னை, நவம்பர் 25- சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன்,கேம், மானஸ்தன் உள்பட 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை ராதா, தொழிலதிபர் மோசடி செய்ததாக புகார் கொடுத்து காவல் அதிகாரியின் கேள்விகளுக்கு கண்ணீர் மல்க பதில் அளித்து ஆதாரங்களையும் ஒப்படைத்தார். குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபரிடம் இன்று விசாரணை நடத்த காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர் சென்னை காவல் நிலையத்தில் கடந்த 21ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில் ஆந்திர மாநிலம் நெல்லூர் எனது சொந்த ஊர். தாயாருடன் வசிக்கிறேன். நிஜ பெயர் பர்வீன். சினிமாவுக்காக ராதா என்று பெயரை மாற்றிக் கொண்டேன். 2008 ஆகஸ்ட் 16ம் தேதி எனக்கு தெரிந்த சினிமா தயாரிப்பாளர் சவுந்தர் ராஜன் என்பவர் திருவல்லிக்கேணி தைபூன் அலிகான் சாலையை சேர்ந்த பைசூல் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
பைசூல் சினிமா தயாரிப்பாளர் என்று கூறி, அவர் தயாரிக்கும் படத்துக்கு என்னை ஒப்பந்தம் செய்தார். முன்பணமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தார். அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வந்தார், என்னை நேசிப்பதாக கூறிய அவர், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். ஆசை வார்த்தை கூறி 2008 முதல் 2012 வரை என்னுடன் உறவு கொண்டார். நான் கர்ப்பம் ஆனதும் வைர வியாபாரத்தில் நஷ்டம், அதில் இருந்து மீண்டதும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதை நம்பி கர்ப்பத்தை கலைத்தேன்.இந்நிலையில் பைசூல் வைர வியாபாரத்தை விரிவுபடுத்துவதாக பொய் சொல்லி என்னிடம் படிப்படியாக 50 லட்சம் பெற்றார். அவர் சொல்வது பொய் என்று தெரிந்ததும் அவரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போது, பைசூலுக்கு ஏற்கனவே திருமணமாகி அவரது முதல் மனைவி பிரிந்து சென்றது தெரியவந்தது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது திருமண ஆசை காட்டி உறவு கொண்டார். அதை கைப்பேசியில் படம் பிடித்து வைத்திருந்தார். பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். தற்போது, காவல் நிலையத்திற்கு சென்றால் அந்தரங்க காட்சிகளை இணைய தளத்தில் வெளியிடுவேன், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
எனவே, என்னை ஏமாற்றிய பைசூல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வடபழனி உதவி ஆணையர் சிவசுப்பிரமணியை தி.நகர் துணை ஆணையர் பகலவன் கேட்டுக்கொண்டார். அதன்படி, நேற்று முன்தினம் மாலை நடிகை ராதா வடபழனி உதவி ஆணையர் முன்பு ஆஜரானார். அவரை காண அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கூடிவிட்டனர். பின்னர், உதவி ஆணையரிடம் பைசூலுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது. தன்னை திருமணம் ஆசை காட்டி எப்படியெல்லாம் மோசடியில் ஈடுபட்டார். வைர வியாபாரம் செய்வதற்காக 50 லட்சம் எப்படி பெற்றார் என்பது பற்றியும் கைப்பேசியில் படம் பிடித்த அந்தரங்க காட்சிகளை வைத்து தன்னை மிரட்டுவது பற்றியும் கண்ணீருடன் ராதா கூறினார்.
மேலும், பைசூலுடன் தான் ஒரே அறையில் தங்கியதற்கான ஓட்டல் சீட்டையும் காண்பித்தார். ராதா அளித்த அனைத்து தகவல்களையும் காவல் துறையினர் பெற்றுக் கொண்டனர். அடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தொழில் அதிபர் பைசூலிடம் இன்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், பைசூல் தனது கைப்பேசியில் முடக்கி விட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவரின் நண்பர் மூலம் பைசூலை சுற்றி வளைக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.