சென்னை, டிசம்பர் 20– சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா தொழில் அதிபர் பைசூல் மீது மோசடி புகார்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தன்னை ஏமாற்றி, பணத்தை சுருட்டிவிட்டு தலைமறைவாக இருக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்குவதாகவும் ராதா குற்றம் சாட்டியிருந்ததார். இது தொடர்பாக தினமும் பேட்டியளித்த அவர் பைசூல் மீதும், காவல்துறையினர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். தன்னுடைய புகார் மனு குறித்து விசாரணை நடத்தி வரும் வடபழனி காவல்துறையினர் மீதும், பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார். காவல்துறையினர் பைசூலுக்கு ஆதரவாக செயல்படுவதாக பெண் காவல் அதிகாரி மீதும் புகார் தெரிவித்தார். மேலும், உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் பைசூலுடன் தினமும் தொலைப்பேசியில் தொடர்ப்பு கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போனார்.
இப்படி காவல்துறையினர் மீதும் பைசூல் மீதும் அவதூறு பரப்பிய அவர் நேற்று மாலையில் திடீரென வடபழனி காவல்நிலையத்தில் மாலை 6.30 மணி அளவில் அவசரம் அவசரமாக காரில் வந்திறங்கி காவல்துறையினரிடம் சென்று பைசூல் மீதான வழக்கை மீட்டுக் கொள்வதாக கூறி மனு எழுதிக் கொடுத்தார்.
அதற்கு காவல்துறையினர், நீங்கள் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவிட்டது. எதைச் சொல்ல வேண்டும் என்றாலும் நீதிமன்றத்தில் சொல்லுங்கள் என்று கூறி அவர் கொடுத்த புகாரை மறுத்தனர்.
ஆனால் ராதா எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் காவல்நிலையத்தைவிட்டு வெளியேறினார்.
தேவையில்லாத குற்றச் சாட்டுகளை கூறி, காவல்துறைக்கு களங்கம் விளைவித்த ராதா மீது அவதூறு வழக்கு தொடர காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ராதாவின் புகார் மனுவை விசாரித்த அதிகாரி ஒருவர் கூறும்போது, காவல்துறையின் நேரத்தை வீணடித்ததுடன், கெட்ட பெயரையும் ஏற்படுத்திய ராதா மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.