சிகார், நவம்பர் 29- ”அரசியல் சட்ட கடமைகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 1ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டம் சிகாரில் நேற்று நடந்தது. அதில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பேசியதாவது, “ இங்கு பிரசாரம் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா, ஏழைகளுக்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், அவை அமல்படுத்தப்படவில்லை.
அரசியல் சட்டத்தை, சட்ட மேதை அம்பேத்கர் உருவாக்கினார். ஏழைகளை மேம்படுத்த அவர்களை படிப்பறிவு பெறச் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம். ஆனால், காங்கிரஸ் கட்சி அரசியல் சட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற தவறிவிட்டது. கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை அழித்துவிட்டது. உயர்நீதிமன்றம் சொல்லியும் மத்திய அரசு கேட்கவில்லை.
ஆயிரக்கணக்கான டன் கோதுமை ரயில் நிலையங்களில் வீணாக கிடக்கிறது. பசியால் வாடும் ஏழைகளுக்கு அதை கொடுப்பதில்லை. ஆனால், ஒயின் தயாரிப்பாளர்களுக்கு கிலோ 80 காசுகளுக்கு அது கொடுக்கப்படுகிறது.” என்று மோடி கூறினார்.