Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா தேர்தல் களம் # 2 – தேசியத் தலைவரின் செல்வாக்கும், பண அரசியலும்...

ம.இ.கா தேர்தல் களம் # 2 – தேசியத் தலைவரின் செல்வாக்கும், பண அரசியலும் ஆக்கிரமித்த மத்திய செயலவை தேர்தல்கள்!

685
0
SHARE
Ad

41385860109_295x200டிசம்பர் 3– நடந்து முடிந்த ம.இ.கா தேர்தல்களை மேலோட்டமாகக் கண்ணோட்டமிடும் போது தேசியத் தலைவரின் செல்வாக்கும், பண அரசியலும்தான் இந்த ம.இ.கா.வின் மத்திய செயலவைக்கான தேர்தல் களத்தை முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

அணியில்லை என்று தேசியத் தலைவர் பழனிவேலு ஒரு புறத்தில் பத்திரிக்கைகளில் அறிக்கை விடுத்துக் கொண்டே, இன்னொரு புறத்தில் தனக்கு நெருக்கமான ஒவ்வொரு தொகுதி தலைவரையும் தொகுதி பொறுப்பாளர்களையும் தனது அலுவலகத்திற்கு அழைத்து, 28 பேர் கொண்ட ஒரு பட்டியலை வாசித்து அவர்களில் 23 பேருக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றார்.

அதே சமயத்தில் தேசியத் தலைவரின் அரசியல் செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் ஒரு குழுவினர் நேரடியாக ஊர் ஊராக சென்று, சீன உணவு விடுதிகளில் பேராளர்களைச் சந்தித்தனர். அதிகாரத்துவ மத்திய செயலவை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினர். அதே சமயம் அந்த கூட்டங்களுக்கு வந்திருந்த மற்ற வேட்பாளர்களையும் பாரபட்சமில்லாமல் பேராளர்களுக்கு அறிமுகப்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இருப்பினும் முதலில் தேசியத் தலைவர் அணி என்ற மறைமுக தோரணையில் அதிகாரத்துவ அணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டு, பின்னர் அந்த கூட்டங்களுக்கு வந்திருந்த மற்ற வேட்பாளர்களையும் தேசியத் தலைவரின் அணியினர் அறிமுகப்படுத்தினர்.

இறுதிக் கட்ட பிரச்சாரமாக தேர்தலுக்கு முதல் நாள் இரவு தேசியத் தலைவரின் அணி என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, அவரது ஆதரவாளர்களால், பழனிவேலுவுக்கு நெருங்கிய தொகுதி  தலைவர்களிடம் 28 பேர் கொண்ட ஆரஞ்சு வண்ணத்திலான பட்டியல் விநியோகிக்கப்பட்டது.

அந்த 28 பேர் கொண்ட பட்டியலில் இருந்துதான் 23 பேர்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டளையும் தொகுதி தலைவர்களிடம் தேசியத் தலைவரின் கட்டளையாக பிறப்பிக்கப்பட்டது,

தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் இந்த 28 பேர் கொண்ட பட்டியலில் இருந்துதான் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதும், இந்தப் பட்டியலில் இல்லாத 5 பேர் மட்டும் வெளியில் இருந்து பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதும் தெளிவாகப் புரியும்.

பேராளர்களும் 88 பேர் இருந்த குழப்பத்தால், தெளிவற்ற நிலையால் தேசியத் தலைவரின் அணிக்கே வாக்களித்தனர். இன்னொரு வகை பேராளர்களோ, தொகுதித் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் – அவர்களோ, தொகுதி தலைவர்களின் சொல்படி அவர் விநியோகித்த அதிகாரத்துவ வேட்பாளர்களின் பட்டியலுக்கே வாக்களித்தனர்.

தேசியத் தலைவரின் செல்வாக்கு இவ்வாறு கட்சிப் பேராளர்களிடையே பயன்படுத்தப்பட்ட வேளையில் அதிகாரத்துவ வேட்பாளர்களுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பண விநியோகமும் பேராளர்களுக்கு செய்யப்பட்டது என ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

பல மத்திய செயலவை வேட்பாளர்கள் பகிரங்கமாக பணத்தை அஞ்சல் உறைகளில் வைத்து விநியோகிக்க ஒரு சில வர்த்தக வேட்பாளர்கள் தங்களின் நிறுவனப் பொருட்களை பகிரங்கமாக பேராளர்களுக்கு விநியோகித்தனர்.

தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது பணபலம் கொண்ட வேட்பாளர்களும், தேசியத் தலைவரின் ஆசி பெற்ற அதிகாரத்துவ வேட்பாளர்களுமே வெற்றி பெற்றார்கள் என்பதைக் காண முடியும்.

(முக்கிய குறிப்பு: மேற்காணும் செய்திக் கட்டுரை செல்லியலுக்காக அதன் ஆசிரியர் குழுவினரால் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும். இந்த கட்டுரையையோ, அல்லது இதன் பகுதிகளையோ செல்லியலின்  முன் அனுமதியின்றி, மற்ற பத்திரிக்கைகளோ, மற்ற இணையத் தளங்களோ பிரசுரிக்கக் கூடாது. மீறி பிரசுரித்தால், மலேசிய சட்டங்கள்படி நடவடிக்கை எடுக்கப்படும்)