Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா. அரசியல் அணிகள் மாற்றம் காண்கின்றன! மறு தேர்தல் சாத்தியமா?

ம.இ.கா. அரசியல் அணிகள் மாற்றம் காண்கின்றன! மறு தேர்தல் சாத்தியமா?

730
0
SHARE
Ad

MIC-logoடிசம்பர் 10 – ம.இ.கா. கட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அடுத்த தவணைக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயல் திட்டங்களில் இறங்கி, ம.இ.காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று பார்த்தால், தேர்தலில் முறைகேடுகள், மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற அறைகூவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வாக்குகள் கூடுதலாக கணக்கிடப்பட்டுள்ளன என்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட, வாக்களிக்கும் இடத்தில் இருந்த “மாலா” என்ற பெண்மணி யார் என்ற கேள்விக் கணைகளும் தொடுக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கிய திருப்பம் என்னவென்றால், தேசியத் தலைவர் பழனிவேலுவின் அணியில் அவரது ஆசியோடு உதவித் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட்ட விக்னேஸ்வரனே தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக, பழனிவேலுவுக்கு எதிராக புகார்கள் கூறியிருப்பதுதான்!

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து, தேசியத் தலைவரின் அணியில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான டத்தோ ஜஸ்பால் சிங்கும் குறுந்தகவல்கள் மூலம் தனது அதிருப்தியை வெளியிட்டதாகவும், தனது நெருக்கமான அரசியல் சகாக்களிடம் தேர்தல் முறைகேடுகள் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்து வருவதாகவும் ம.இ.கா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முறைகேடுகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனும், தேசியத் தலைவர் மௌனம் கலைய வேண்டும் என்றும் தேர்தல் முறைகேடுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

உதவித் தலைவர் தேர்தலும், மத்திய செயலவைக்கான தேர்தலும் மீண்டும் நடத்தப்பட வேண்டுமென புகார்கள் முறையாக ம.இ.கா. தலைமையகத்திலும், சங்கப் பதிவதிகாரியிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், ம.இ.கா வில் மறு தேர்தல் வருமா? அது சாத்தியமா? என்ற கருத்துப் பரிமாற்றங்கள் தற்போது நாடு முழுமையிலும் உள்ள பேராளர்களிடையே நிகழ்ந்து வருகின்றன.

ஜசெகவில் முறைகேடுகள் என்று கூறி மறு தேர்தலுக்கு உத்தரவிட்ட சங்கப் பதிவகம் அதே போன்றதொரு கடுமையான நிலைப்பாட்டை தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான ம.இ.காவின் மீதும் எடுக்குமா என்பதுதான் தற்போது அரசியல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ள கேள்வி!

ம.இ.காவில் அணிகள் மாறும்!

அவ்வாறு மறு தேர்தல் நடந்தால், ம.இ.காவில் அணிகள் மாறும் என்பதுதான் தற்போதைய சுவாரசியம்! உதவித் தலைவருக்கு மறு தேர்தல் நடந்தால் விக்னேஸ்வரன் மீண்டும் பழனிவேலுவின் ஆதரவுடன் போட்டியிடமாட்டார், பழனிவேல் அணியினரும் அவரைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம்.

சரவணன், விக்னேஸ்வரன், டி.மோகன் ஆகியோர் ஒரே குழுவாக இணைந்து உதவித் தலைவர்களுக்கான மறு தேர்தலில் போட்டியில் குதிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், அதற்குரிய பின்னணி பேச்சு வார்த்தைகள் தொடங்கிவிட்டதாகவும் ம.இ.கா.வில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

மறு தேர்தலில் டத்தோ தேவமணி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு, இந்த குழுவுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு நடந்தால், தேவமணிக்குக் கிடைத்த 332 வாக்குகள் மறு சுழற்சியாக வேட்பாளர்களுக்கிடையில் மீண்டும் பிரித்துப் போடப்பட வேண்டும். இதனால், அதிரடியாக தேர்தலின் முடிவுகள் மாறக்கூடும் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்த மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறும்போது, தேர்தல் முறைகேடுகள் குறித்து தகுந்த விளக்கம் கிடைக்கலாம், நிலைமைகள் மாறலாம். இருந்தாலும், ம.இ.காவே மறு தேர்தலுக்கு உத்தரவிட வாய்ப்பில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த துதான்.

இந்நிலையில், முக்கியமாக சங்கப் பதிவதிகாரி ம.இ.கா. தேர்தல் முறைகேடுகள் குறித்து என்ன முடிவெடுக்கப் போகின்றார் என்பதை வைத்துத்தான் ம.இ.கா.வின் அடுத்த கட்ட அதிரடி அரசியல் நடவடிக்கைகள், காய் நகர்த்தல்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(முக்கிய குறிப்பு: மேற்காணும் செய்திக் கட்டுரை செல்லியலுக்காக அதன் ஆசிரியர் குழுவினரால் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும். இந்த கட்டுரையையோ, அல்லது இதன் பகுதிகளையோ செல்லியலின்  முன் அனுமதியின்றிமற்றபத்திரிக்கைகளோமற்ற இணையத் தளங்களோ பிரசுரிக்கக் கூடாது. மீறிபிரசுரித்தால்மலேசிய சட்டங்கள்படி நடவடிக்கை எடுக்கப்படும்)