கோலாலம்பூர், டிச 10 – சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடந்த ஞாயிறு இரவு நடந்த கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 28 பேரில் மலேசியர் ஒருவரும் உள்ளார் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அம்மான் கூறுகையில், “சிங்கப்பூரில் நடந்த கலவரத்தின் போது துணை காவல்துறை அதிகாரிகளாகப் பணியாற்றிய 5 மலேசியர்கள் காயமடைந்தனர்” என்று ஆஸ்ட்ரோ அவானி செய்தியில் தெரிவித்தார்.
மேலும், இது ஒரு ‘உள் விவகாரம்’ என்பதால் அமைச்சரவை சிங்கப்பூர் அரசாங்கத்துடன் இணைந்து விசாரணை நடத்த ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் அனிபா குறிப்பிட்டார்.
எனினும், மலேசிய தூதரக ஆணையர் ஹுஸ்னி ஸை யாகோப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கைது செய்யப்பட்ட மலேசியர் குறித்து மேலும் தகவல்களை கேட்டு வருகின்றோம். அவர் செய்த குற்றம் என்னவென்பது குறித்து விளக்கமளிப்பதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.