சிங்கப்பூர், ஜூலை 8 – கடந்த ஆண்டு டிசம்பர் 8 -ம் தேதி, சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு வெளியிட்ட 8 பரிந்துரைகளை சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரிந்துரைகளை அரசாங்கம் தீவிரமாக செயல்படுத்தும் என்றும் துணை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான திரு தியோ சீ ஹீயான் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 30 -ம் தேதி, லிட்டில் இந்தியா சிறப்பு விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கையில், வருங்காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க பல்வேறு முக்கிய பரிந்துரைகளை அளித்துள்ளதோடு, அயல்நாட்டினரை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் தியோ தெரிவித்தார்.
அந்த பரிந்துரையின் படி, சிங்கப்பூரில் பெரிய அளவிலான பொது ஒழுங்குப் பிரச்சினைகளை சமாளிக்க, காவல்துறையின் ஆற்றலையும், வளத்தையும் சிங்கப்பூர் அரசாங்கம் அதிகரிக்க உள்ளதாகவும், அதன் படி, காவல்துறையின் சிறப்பு செயலாக்கப் பிரிவில் கூடுதலாக 300 அதிகாரிகள் சேர்க்கப்படவுள்ளனர் என்றும் தியோ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
லிட்டில் இந்தியா கலவரத்தை கட்டுப்படுத்த தன்னைப் பற்றி கவலைப்படாமல் மிக சிறந்த முறையில், அபாயங்களை எதிர்த்து போராடிய அதிகாரிகளுக்கு அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்கும் என்றும் தியோ அறிவித்தார்.
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 8 -ம் தேதி நடந்த பேருந்து விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இறந்தார்.
இதனால் அங்கு கலவரம் வெடித்து, அந்த பகுதியில் இருந்த 400-க்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதில் 43 அதிகாரிகள் காயமடைந்தனர். 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.