சிங்கப்பூர், ஜூன் 24 – கடந்த டிசம்பர் மாதம் சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் ஏற்பட்ட கலவரத்தில், காவல்துறையினரை செயலபட விடாமல் இடையூறு விளைவித்ததற்காக இந்திய நாட்டைச் சேர்ந்த மகாலிங்கம் தவமணி என்ற 27 வயது இளைஞருக்கு 5 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தவமணி மீது முதல் கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த விசாரணையில் துணை காவல்துறைக் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் என்பவரை செயல்படவிடாமல் தடுத்ததாக குற்றம் திருத்தியமைக்கப்பட்டு, தவமணிக்கு 5 மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
இந்த குற்றத்திற்கு, அவருக்கு எட்டு ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
சிங்கப்பூர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 25 பேரில், குற்றத்தை மறுத்து வழக்கு விசாரணை கோரிய முதல் நபர் தவமணி ஆவார். அத்துடன், காவல்துறைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக முதன் முதலாக தண் டனை பெற்றவரும் இவர்தான்.
இவருக்கான தண்டனைக் காலம் இவ்வாண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதிக்கு பின், தேதியிடப்பட்டதால் அவருடைய தண்டனைக் காலம் நேற்றே நிறைவடைந்து காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 8 -ம் தேதி நடந்த பேருந்து விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இறந்தார்.
இதனால் அங்கு கலவரம் வெடித்து, அந்த பகுதியில் இருந்த 400-க்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதில் 43 அதிகாரிகள் காயமடைந்தனர். 24 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.