கோலாலம்பூர், டிச 16 – கோலாலம்பூர் மேயர் சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்தி தனது கடமையை செய்ததற்காக அவரை பதவி விலகுமாறு கூறுவது நியாயமற்றது என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சரான டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர்(படம்) இன்று தெரிவித்தார்.
சொத்துமதிப்பீட்டு வரி உயர்வைக் கண்டித்து செய்யப்பட்டுள்ள சுமார் 20,000 புகார் கடிதங்களை அதிகாரிகள் நிச்சயம் கருத்தில் கொள்வார்கள் என்று அட்னான் உறுதியளித்தாலும், அதன் பின்னர் 300 க்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் நகரவாசிகள் இன்று டிபிகேஎல் தலைமையகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலாலம்பூர் மேயர் டத்தோஸ்ரீ அகமட் பீசல் தாலிப்பை பதவி விலகுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.
இது குறித்துக் கருத்துரைத்த அட்னான், “நாங்கள் எங்களது கடமையை செய்கின்றோம். இதனால் உங்களின் சொத்துக்கு வாடகை விகிதமும் அதிகரிக்கிறது. நாங்கள் இன்னும் அதன் விலையை நிர்ணயிக்கவில்லை” என்று தெரிவித்தார்.