Home அரசியல் அரசு செலவில் சுற்றுலாவா செல்கிறேன்? – ரோஸ்மா வருத்தம்

அரசு செலவில் சுற்றுலாவா செல்கிறேன்? – ரோஸ்மா வருத்தம்

575
0
SHARE
Ad

rosmah-first-lady

கோலாலம்பூர், டிச 17 – அரசாங்க ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி தான் ஒன்றும் சுற்றுலா செல்லவில்லை என்றும், அரசாங்கம் சம்பந்தப்பட்ட அலுவல் காரணமாகவே தனது பயணம் அமைந்ததாகவும் பிரதமரின் மனைவியான ரோஸ்மா மனசோர் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான கால நேரங்களில் பயணிகள் விமானத்தைப் பயனடுத்த முடியாது. ஒவ்வொரு பயணமும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பாதுகாப்பு, நேரம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து அதன் பின்னரே பயணத்திற்கு அனுமதி  வழங்கப்படும் என்றும் ரோஸ்மா நேற்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் இது போன்ற அரசாங்க செலவில் ஜெட் விமானகளைப் பயன்படுத்துவது நஜிப் பிரதமராவதற்கு முன்பே வழக்கத்தில் இருந்ததாகவும் ரோஸ்மா குறிப்பிட்டார்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் தனது கத்தார் பயணம் குறித்து எதிர்கட்சியைச் சேர்ந்த கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக கருத்துரைத்த ரோஸ்மா, தான் லங்காவியில் இருந்து கத்தார் சென்று, பின்னர் அங்கிருந்து துபாய், ஸ்ரீ லங்கா மற்றும் இறுதியாக பங்களாதேஷ் சென்றதாகக் குறிப்பிட்டார்.

இது போன்ற பயணங்களில், பயணிகள் விமானம் சரிப்பட்டு வராது என்று குறிப்பிட்ட ரோஸ்மா, ஒவ்வொரு நாட்டிலும் தகுந்த நேரத்தில் தொடர் விமானங்கள் இருக்காது என்றும் தெரிவித்தார்.

‘மலேசிய பெண்களின் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் கத்தாரில் தான் உரையாற்றியதாகவும், அதன் மூலம் தான் வெற்றி பெற்ற மலேசியப் பெண்களைப் பற்றி தான் அங்கே பெருமையாகக் கூறியதாகவும் ரோஸ்மா கூறினார்.

 

அனைத்துலக மக்கள் அனைவரும் நமது மலேசியப் பெண்கள் குறித்து மரியாதையாகப் பேசும் அதே நேரத்தில், நமது மக்கள் தான் செய்வது குறித்து கருத்துக்களை வெளியிடுவதாக ரோஸ்மா வருத்தம் தெரிவித்தார்.