Home இந்தியா சீக்கியர் கலவரம் குறித்து விளக்கம் அளிக்க சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

சீக்கியர் கலவரம் குறித்து விளக்கம் அளிக்க சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

448
0
SHARE
Ad

sonia-afp

நியூயார்க், டிச 17- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 31-10-1984 அன்று தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற மனித உரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

#TamilSchoolmychoice

1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகதீஷ் டைட்லர் உள்ளிட்ட பலரை சோனியா காந்தி பாதுகாத்து வருகிறார்.

எனவே, சீக்கியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் போன்றவற்றிற்கு சோனியா காந்தியிடம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என அமெரிக்கா வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டம் மற்றும் சித்ரவதைக்குள்ளானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்தியை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் கட்டளையாணை அளித்து 4 மாதங்கள் ஆகியும் சோனியா காந்தி தரப்பில் இருந்து நீதிமன்றத்திற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வரும் ஜனவரி 2-ம் தேதிக்குள் சோனியா காந்தி தனது விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.