கோலாலம்பூர், டிச 19 – அரசாங்கத்தின் விலைவாசி உயர்வு மற்றும் மானியம் ரத்து போன்ற சமீபத்திய அறிவிப்புகள் மக்களுக்கு பிடிக்காமல் போகலாம், ஆனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு இது அவசியமாகிறது. அதனால் மக்கள் தான் பின்னர் நன்மையடையப் போகிறார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சார்பாக பிரதமரின் பத்திரிக்கை செயலாளரான தெங்கு சரிஃபுடின் தெங்கு அகமட் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மலேசியப் பொருளாதாரத்தை மேலும் வலுவாக்க வேண்டும் என்றால், விலைவாசி உயர்வு மற்றும் மானியம் ரத்து செய்தல் போன்ற மக்களுக்கு செய்யும் பொதுச்செலவுகளில் தான் அரசாங்கம் கை வைக்க வேண்டியுள்ளது. ஆனால் இப்போது அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம், பின்னர் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தால் அது மக்களுக்கு தான் நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மக்களுக்கு கொஞ்ச காலம் பிடிக்காமல் போகலாம், ஆனால் அந்நிய முதலீட்டாளர்கள் மலேசியா மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநிறுத்த இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில், அரசாங்கம் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் வகையில் BR1M மற்றும் ஒரே மலேசியா உதவித்தொகை போன்றவைகளை வழங்கவுள்ளது. அத்துடன் புதிய ஒரே மலேசிய கடைகளையும், ஒரே மலேசியா மருந்தகங்களையும் திறக்கவுள்ளது என்றும் தெங்கு சரிஃபுடின் தெங்கு அகமட் கூறியுள்ளார்.
நஜிப் இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்ற இந்த வருடத்தில் மட்டும், இரண்டு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் சீனி விலைக்கு அரசாங்கம் வழங்கி வந்த மானியம் ரத்து செய்யப்பட்டது. அதோடு பொருட்கள் மற்று சேவை வரி (GST) 6 சதவிகிதமாக்கப்பட்டது.
இதுதவிர, சொத்து மதிப்பீட்டு வரி, மின் கட்டணம் மற்றும் நெடுஞ்சாலை டோல் கட்டணம் ஆகியவையும் உயர்த்தப்பட்டன.