Home கலை உலகம் பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

867
0
SHARE
Ad

karthi-haniska-biriyani-movie-stills-550x280

டிசம்பர் 20 – இது ஜாலியான கதை கொண்ட படம் என்பதால், நாமும் சும்மா ஜாலியாகவே ஒரு விமர்சனம் செய்வோம்.

காரமான கதையில், காமெடி கிஸ்மிஸ்களை வழி நெடுக தூவி, நடுவே லெக் பீஸ் (கவர்ச்சி) ஒன்றையும் வைத்து, கையில் கிடைத்த தன் அப்பா காலத்து பழைய மசாலா சரக்கையெல்லாம் சேர்த்து இனிப்பும், புளிப்பும், கசப்புமாக ‘பிரியாணி’ சமைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

#TamilSchoolmychoice

ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தான் தெரிகிறது. அதில் பெரிய ‘மட்டன் பீஸ்’ ஒன்று கிடக்கிறது என்று.

யார் அந்த ‘மட்டன் பீஸ்’ என்று யோசிக்கிறீர்களா? அட நம்ம கார்த்தி தான்.

தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து வந்த கார்த்தியின் நடிப்பு பசியை ‘பிரியாணி’ ஆவது தீர்க்கும் என்று நினைத்தால், இந்த படத்திலும் குடியும், பெண்களிடம் ஜொள் விடுவதும், அசட்டுத்தனமாக சிரிப்பதும் என்று மீண்டும் பலிகடாவாக்கப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை பிரேம்ஜி தான் நமக்கு ‘பிளாஷ்பேக்’ கதை சொல்கிறார்.

இடைவேளைக்கு பிறகு, “போலீஸ் துரத்தும், ஓடிகிட்டே இருப்பாங்க… இவங்களே குற்றவாளியை தேடி கண்டுபிடிப்பாங்க. கடைசில போலீஸ் வரும்” என்று பக்கத்து சீட்டில் உள்ளவர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் (பிரேம்ஜி குரல் – “என்ன கொடுமை சார் இது?”)

சமீபத்தில் வெளிவந்த படங்களில், ‘டிவிஸ்ட்’ என்ற பெயரில், கிளைமாக்ஸில் நாம் எதிர்பார்க்காத ஒரு கதாப்பாத்திரத்தை குற்றவாளியாக காட்டுகிறார்கள்.

அதே போல், இந்த படத்திலும் அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை கிளைமாக்ஸில் கை காட்டுகிறார் வெங்கி…

ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு அந்த குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தின் மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, இன்னொரு கதாப்பாத்திரம் மேல் நமது சந்தேகத்தை திசை திருப்ப அவர் கடும் முயற்சிகள் செய்திருக்கிறார்…

சக்தி சரவணன் ஒளிப்பதிவு சுமார் ரகம். யுவன் சங்கர் ராஜாவிற்கு இது 100 வது படமாம். ஆனால் மனதை தொடும் இசை என்று படத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

‘பிரியாணி’ செய்ய பயன்படுத்திய கதை

சட்டவிரோதமாக பல ரகசிய தொழில் செய்து வரும் மிகப்பெரிய பணக்காரராக நாசர். அவரது வீட்டோட மருமகன் ராம்கி (ஆம்… பழைய நடிகர் ராம்கியே தான்), இவர்களுக்கு உதவி செய்யும் நண்பராக போலீஸ் உயர் அதிகாரி ஜெயப்பிரகாஷ்.நாசர் செய்யும் ரகசியங்களைக் கண்டுபிடிக்க துப்பறியும் ரகசியப் போலீஸ் அதிகாரியாக சம்பத். இது ஒரு புறம் இருக்க…

சிறுவயது முதல் நண்பர்களான கார்த்தியும், பிரேம்ஜியும் எப்போதும் குடியும், கும்மாளமுமாக அலைகிறார்கள். பிரேம்ஜி விரும்பும் பெண்களையெல்லாம் இடையில் புகுந்து கார்த்தி தட்டிக்கொண்டு போய்விடுகிறார்.பார்க்கும் பெண்களையெல்லாம் ஜொள் விடும் கார்த்திக்கு, ராம்கியின் டிவி நிறுவனத்தில் செய்தியாளராக இருக்கும் ஹன்சிகாவின் மீதும் காதல் இருக்கிறது. அவ்வப்போது தனது அக்காவின் மேல் பாசம் காட்டும் பொறுப்பான தம்பியாகவும் மாறிவிடுகிறார்.

இப்படியே படம் தொடங்கி 40 நிமிடங்கள் ஓடுகின்றன.

ஒரு கட்டத்தில், இரவில் குடித்துவிட்டு கார் ஓட்டிக்கொண்டு வரும் கார்த்திக்கும், பிரேம்ஜிக்கும் பிரியாணி சாப்பிட வேண்டும் என்று தோன்ற, வழியில் ஒரு பிரியாணி கடையில் சாப்பிட நிறுத்துகிறார்கள்.

அங்கே ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள். அதன் பின்னர் நாசர் கொல்லப்படுகிறார். இவர்கள் மீது அந்த பழி விழுகிறது என்று கதையில் பல முடுச்சுகள் விழுகின்றன.

படத்தில் கிளைமாக்ஸில் நாசரை கொன்றது யார்? அந்த பெண்ணிற்கும் நாசருக்கும் என்ன சம்பந்தம்? இவர்களின் மீது அந்த கொலைப்பழி விழ காரணம் என்ன? போன்ற முடுச்சுகள் கட்டு அவிழ்க்கப்படுகின்றன.

ருசியானவை 

– அக்காவை கல்யாணம் செய்து கொள்ளப்போகும் மாமாவுடன், கார்த்தி மிக சகஜமாக நண்பர் போல் பழகும் காட்சிகள் (நடைமுறை வாழ்வின் எதார்த்தங்கள்)

– உமா ரியாஸின் நடிப்பு… கதையில் உமா ரியாஸ் வந்தவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. சண்டையிலும், தோற்றத்திலும் உமா ரியாஸ் பிரமாதம்…

– பிரேம்ஜியின் காமெடி உளரல்கள் பல இடங்களில் கடுப்பேற்றினாலும் சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

– நாசர் வேடத்தில் பிரேம்ஜி நடிப்பதாக இருக்கும் காட்சி ஒன்றில் நிஜ நாசரே நடித்திருக்கிறார். ஆனால் அவர் பிரேம்ஜியின் பாடிலேங்குவேஜை அப்படியே செய்திருப்பது அருமை.

– படத்தின் கடைசி அரைமணி நேர விறுவிறுப்பு

– பிரியாணியில் லெக் பீஸாக நடிகை மாண்டி தாக்கர். படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார்.. (குழந்தைகள் ஜாக்கிரதை…)

– படத்தில் ஜெய், அரவிந்த் ஆகாஷ் போன்ற நடிகர்கள் ஆங்காங்கே தலைகாட்டியிருக்கிறார்கள்…  ஒரு ராப் வகை பாடல் காட்சியில் மலேசியாவின் சீஸே மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.

வேண்டாதவை

– முதல் பாதியில் குடி, ஜொள்ளுவிடுதல் என்று ஜவ்வாக இழுக்கும் திரைக்கதை

– பிரேம்ஜியும், கார்த்தியும் கற்பனை செய்யும் காட்சிகளையெல்லாம் காட்சிப்படுத்தி காட்டியிருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது… குறிப்பாக இறந்த நாசரின் உடலை வைத்துகொண்டு அலையும் போது சீரியஸாக கதை நகரும் இடங்களில் பிரேம்ஜியும், கார்த்தியும் கற்பனை செய்து பார்ப்பது வெறுப்படையச்செய்கிறது.

– தொழிலதிபர் நாசரைப் பற்றி துப்புத்துலக்க வரும் ரகசியப் போலீஸ் சம்பத்திற்கு, நாசர் மகளின் காதல் விவகாரம் தெரிந்திருக்கிறது. ஆனால் அவள் காதலித்தது யார் என்று கூடவா தெரியாது?

–  கார்த்தியின் அக்கா, மாமா கடத்தப்படுவது…. மாமா கத்தியால் குத்தப்பட்டு சண்டைக்காட்சி முடியும் வரை உயிரோடிருப்பது….  அக்காவை கட்டிப்போட்டு இருக்கும் கட்டிடத்திற்கு, கார்த்தியின் நண்பர்கள் சரியாக வந்து சேர்வது, கிளைமாக்ஸில் சண்டை நடந்து கொண்டு இருக்கும் போது சரியாக போலீஸ் வந்து குற்றவாளியை சுட்டு ஹீரோவை காப்பாற்றுவது, போன்ற காட்சிகள் தமிழ் சினிமாவின் அதரபழசான மசாலாக்கள்.

– இதையெல்லாம் விட கொடுமை என்னவென்றால், ஏற்கனவே இறந்து நாட்களாகிவிட்ட நாசரின் உடலை, அப்போது தான் சுடப்பட்டு இறந்ததாக எண்ணி ராம்கி ஆம்புலன்ஸை கூப்பிடு என்று அழுவது ( பிண நாற்றம் வரவில்லையோ?)

மொத்தத்தில் வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ – வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் அதில் சிக்கன்

– செல்லியல் விமர்சனக் குழு

பிரியாணி – முன்னோட்டம்

please install flash