புதுடெல்லி, டிசம்பர் 20- ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை நிறைவேற்றும்படி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் செய்தார். அவரது கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் இந்த மசோதாவை நிறைவேற்றியது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற உளவுத்துறை மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு கூறியதாவது, “ஜனநாயகம் என்றால் குறிப்பிட்ட காலங்களில் தேர்தல் நடத்துவது, மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது, நிர்வாகம், சட்டம் இயற்றுவது மற்றும் அரசின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வது என்றுதான் பொதுவாக நினைக்கிறோம்.
ஆனால், இன்று சூழ்நிலை மாறிவிட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் அரசியலில் சமூக ஆர்வலர் பற்றியோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பற்றியோ யாரும் யோசித்ததில்லை. இன்றோ, அவர்கள் குறிப்பிட்ட சட்டம் இயற்றப்பட வேண்டும், அதன் மூலம் மக்கள் நலன் காக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடுகிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் முடியாது. அன்னா ஹசாரேவின் போராட்டம், ஜனநாயகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது” எனக் கூறினார்.