Home நாடு புதிய கல்விக் கொள்கையால் சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்து – சீன கல்வி அமைப்பு டோங்...

புதிய கல்விக் கொள்கையால் சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்து – சீன கல்வி அமைப்பு டோங் சோங் எச்சரிக்கை!

557
0
SHARE
Ad

Chinese-School-ep2_0

#TamilSchoolmychoice

டிசம்பர் 20 – மலேசியாவின் புதிய கல்விக் கொள்கைக்கான திட்டத்தினால் சீனம் மற்றும் தமிழ் மொழிப் பள்ளிகளுக்கு ஆபத்து ஏற்படுமென சீன கல்வி அமைப்பான டோங் சோங் (Dong Zong) எச்சரித்துள்ளது.

அந்த திட்டத்தில் கொள்கை ரீதியான உள்ளடக்கம் எதுவும் இல்லை என்றும் மொழிப் பள்ளிகள் இந்த நாட்டில் தொடர்வதற்கும், மேம்பாடு காண்பதற்கும் முறையான முன்மொழிதல்கள் எதுவும் இந்த திட்டத்தில் இல்லையென்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

சீனப் பள்ளிகளுக்கான நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பான டோங் சோங் 2013-2015ஆம் ஆண்டுக்கான தேசியக் கல்விக் கொள்கை, அடிப்படைக் குறிக்கோள் ஒரே மொழி சார்ந்த கல்வித் திட்டங்களை செயல்படுத்துவது மட்டும்தான் என்றும் சாடியுள்ளது.

மொழிப் பள்ளிகளுக்கான நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து எதுவும் தெரிவிக்காத காரணத்தால் அரசாங்கம் தொடர்ந்து மொழிப் பள்ளிகளை ஒதுக்கி வருவது தெளிவாகின்றது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இதற்கு முன்பு இந்த கல்விக் கொள்கை திட்டம் குறித்து நாடாளுமன்ற மேலவையில் பேசிய துணைக் கல்வி அமைச்சர் டத்தோ மேரி யாப் டோங் சோங் கல்விக் கொள்கையைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது என்றும் அந்த திட்டத்தில் மொழிப் பள்ளிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதத்தில் பத்திரிக்கைகளுக்கு இன்று அறிக்கை விடுத்த டோங் சோங் அமைப்பு மொழிப் பள்ளிகளுக்கு ஆபத்து நேரும் வகையில் உள்ள கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் தாங்கள் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இந்த நாட்டில் பாதிப்புக்களையே சந்தித்து வருவதற்கான சரித்திரபூர்வமான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.