சியோல்,பிப்.12 – அமெரிக்கா மற்றும் நட்பு நாடான சீனாவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா நேற்று சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கொரியா தீபகற்ப பகுதியில் இருந்து கொரியா இரண்டு நாடுகளாக வடகொரியா மற்றும் தென்கொரியா என்று இருநாடுகளாக பிரிந்தது. வடகொரியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும் தென்கொரியாவில் ஜனநாயக முறையிலும் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென்கொரியாவானது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் தொழில்வளத்தில் சிறந்து விளங்குகிறது. அதேசமயத்தில் வடகொரியாவானது ஆயுத பல நாடாக உருவாகி உள்ளது.
தென்கொரியாவை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆயதபலத்தை வடகொரியா பெருக்கி வருகிறது. இதற்கு சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளும் உதவி செய்து வருகிறது. அதேசமயத்தில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுத்து வருகிறது. வடகொரியா அணு ஆராய்ச்சியில் விரைவாக முன்னேறி வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு வடகொரியா முதன் முதலாக அணுகுண்டு சோதனை நடத்தியது.
இதனையொட்டி அந்த நாட்டு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதையும் மீறி கடந்த 2009-ம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனையொட்டி அந்தநாட்டு மீது மேலும் பொருளாதார தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் 3-வது முறையாக வடகொரியா சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனை நடத்த தீவிரமாக இறங்கியது. இதற்கு அமெரிக்கா,ரஷ்யா, ஜப்பான் மற்றும் வடகொரியாவின் நட்பு நாடான சீனா ஆகியவைகள் உள்பட அனைத்து நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதையும் மீறி வடகொரியா நேற்று 3-வது முறையாக சக்திவாய்ந்த அணுகுண்டு பூமிக்கடியில் வெடித்தது. சீனா எல்லையையொட்டி உள்ள பங்கி-ரி என்ற இடத்தில் இந்த சோதனை நடந்தது. சோதனையின்போது அந்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போதுதான் வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்திய விபரம் உலகிற்கு தெரியவந்தது. இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை நேற்று கூடி வடகொரியா அணுகுண்டு வெடித்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வடகொரியா மீது முழு பொருளாதார தடை விதிப்பது குறித்தும் விவாதம் நடந்ததாக தெரிகிறது. அமெரிக்கா அதிபரா ஒபாமா மீண்டும் அதிபராக பதவி ஏற்ற ஒரு சில மாதங்களில் வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியிருப்பது அந்த நாட்டிற்கு எதிர்ப்பை தெரிப்பதற்காகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அமெரிக்கா இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. சீனா மட்டும் அதிருப்தியை மட்டும் தெரிவித்துள்ளது. வடகொரியா இனிமேல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பதில் முனைப்பு காட்டலாம் என்றும் தெரிகிறது.