கோலாலம்பூர்,பிப்.13- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் உலுசிலாங்கூரில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்று தொகுதி காங்கிரஸ் திட்டவட்டமாக தெரிவித்தது.
பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் அவர்களுக்கும், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் தேர்வு செய்யும் வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் எங்களின் முழு ஆதரவினை வழங்குவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களைப் போல் இப்பொதுத்தேர்தலிலும் உலுசிலாங்கூரில் இருக்கும் 3 சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணி கைப்பற்ற அனைத்து ம.இ.கா. கிளைகளும் பாடுபடும் என்றனர்.
கடந்த பொதுத்தேர்தலில் 198 வாக்குகளில் எதிர்க்கட்சியினரிடம் வெற்றி பெற்றனர். இம்முறை அது போன்று நடக்காமல் இருக்க கடுமையாக உழைப்போம் என்று செயலாளர் சிதம்பரம் கூறினார்.
யார் வேட்பாளர் என்பதை விட அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்பதே முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் என்று தொகுதி காங்கிரஸ் சமூக நலக்குழுத் தலைவர் டத்தோ பி.எஸ்.சாமி தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட பந்தாங் காலி, கோலகுபுபாரு, உலுபெர்ணம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி பெற பாடுபடுவோம் என்றார்.