கோயம்புத்தூர், டிச 27 – ‘தாயகம் கடந்த தமிழ் 2014’ எனும் தலைப்பில் அனைத்துலக மாநாட்டை தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பண்பாட்டு மையம் வரும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூரில் நடத்தவிருக்கிறது.
ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை சுமார் 12 நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், நூலாசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படைக்கவிருக்கின்றனர். மலேசியாவிலிருந்தும் சில பேராளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தாயகம் கடந்த தமிழ்: ஓர் அறிமுகம், தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும், புதிய சிறகுகள், தமிழ் கூறும் ஊடக உலகம், தொழில் நுட்பம் தரும் வாய்ப்புகள், மொழிபெயர்ப்பு: வெளி உலகின் வாயில், தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி என்ற 7 அமர்வுகளின் மூலம் தனித்தனி குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன.
மலேசியாவின் சார்பாக மூத்த இலக்கியவாதியான முனைவர் ரெ.கார்த்திகேசு, மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் கிருஷ்ணன் மணியம், டாக்டர் சண்முக சிவா, முரசு அஞ்சல், செல்லினம் போன்ற செயலிகளின் தொழிநுட்ப வடிவமைப்பாளரான முத்து நெடுமாறன் ஆகியோர் கட்டுரை படைக்கவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாயகம் கடந்த தமிழ் அனைத்துலக மாநாட்டில் பேராளராகப் பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் www.centerfortamilculture.com என்ற இணையத்தள பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை நிறைவு செய்து அனுப்புவதன் மூலம் பதிந்து கொள்ளலாம்.
இந்த மாநாட்டில் பேராளர்களாகக் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.