Home நாடு கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்களிடையே முத்து நெடுமாறன் உரை

கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்களிடையே முத்து நெடுமாறன் உரை

1101
0
SHARE
Ad

DSC04467பிப்ரவரி 3 – உலக எழுத்தாளர்களையும், கடல் கடந்து வாழும் தமிழ் படைப்பாளர்களையும், தமிழ் நாட்டு படைப்பாளர்களோடு ஒருங்கிணைக்கும் வகையில் தாயகம் கடந்த தமிழ் என்ற மாநாட்டை அண்மையில் (ஜனவரி 20 முதல் 23 வரை) தமிழ்ப் பண்பாட்டு மையம் கோயம்புத்தூரிலுள்ள டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

#TamilSchoolmychoice

மாநாட்டின் இரண்டாம் நாளில், மாநாட்டுத் தொடக்க விழா நடந்தேறிய மாநாட்டு மண்டபத்தில் டாக்டர் என்.ஜி.தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் சுமார் 1,500 பேர் முன்னிலையில் செல்லினம், செல்லியல் தளங்களின் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனும், சிங்கை தமிழ் முரசு பத்திரிக்கையின் துணை ஆசிரியர் அழகிய பாண்டியனும்  உரையாற்றினர்.

முத்து நெடுமாறன் உரை

இந்த நிகழ்வில் சுமார் முத்து நெடுமாறன் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். அவரது உரையில் இடம் பெற்ற சில கருத்துகள் பின்வருமாறு:-

“மொழி என்பது ஒரு மதிப்பு மிகுந்த சொத்தாகும். நாம் நமது எண்ணங்களை உழுது பயிரிடக் கிடைத்த ஒரு நிலப்பரப்பு போன்றதாகும் நமக்குக் கிடைத்த மொழி. கூடுதலான மொழிகளை நாம் கற்றுக் கொண்டால், அந்த மொழிகளின் பரப்பிலிருந்து மாறுபட்ட  , சிந்தனைகளை நாம் பெற முடியும்.

DSC04449நம்மைப் பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் என இரு பெரும் மொழிகளைக் கொண்ட மொழிப் பரப்புகளை நாம் பெற்றுள்ளோம். அவற்றை நாம் பண்படுத்தி, பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆங்கிலம் என்ற மொழியின் பரப்பில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் சிந்தனைகளை தமிழ் மொழியின் பரப்பில் இருந்து நாம் கற்றுக் கொள்ள முடியாது. அதே போன்று, தமிழ் பரப்பில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் சிந்தனைகளை ஆங்கிலப் பரப்பில் இருந்து கற்க முடியாது.

ஒரு நிலத்திலிருந்து எடுத்த சிந்தனைக் கருத்தை மற்றொரு நிலத்தில் பயிரிட்டு ஒரு புதிய விதையூன்றலை தோற்றுவிப்பதுதான் நமக்கு அதிகம் பயன்தரக் கூடியதாக அமையும். இப்படி செய்வதன் மூலம் மேலும் புதிய கருத்துகள் உதயமாகும் என்பதுடன் நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்களை நாம் சுலபமாக எதிர்கொண்டு வெற்றி கொள்ளவும் முடியும்.

ஒரு மொழியில் நாம் மேலும் கூர்மையான புலமை பெறுவதன் மூலம் நாம் மேலும் சிறந்த மொழித் தொடர்பாளராக பரிணமிக்க முடியும். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் நமது புலமையை நாம் கூர்மைப் படுத்திக்கொண்டால் நாம் சிறந்த மொழித் தொடர்பாளர்களாக உருவாகலாம் என்பதோடு மேலும் பண்பட்ட சிந்தனாவாதிகளாகவும் மாற முடியும். நாம் என்ன தொழில் செய்தாலும் இவ்வாறு உருமாறுவது சாத்தியமே. ஒரு டாக்டர், வழக்கறிஞர், கணக்காய்வாளர், அல்லது ஒரு பொறியியலாளர் என அனைவருக்குமே இது பொருந்தும்”

“தமிழால் நான் மற்றவர்களை வெற்றி கொண்டேன்”

தொடர்ந்து தனதுரையில் முத்து நெடுமாறன் “நான் ஒரு பொறியியலாளர். எனக்கிருந்த தமிழறிவால் நான் பல தருணங்களில் மற்றவர்களை விட சிறந்த முறையில் ஜொலிக்க எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது என்பதை நான் அனுபவ ரீதியாகக்கூற முடியும். ஒரு அறை முழுக்க உயர் அதிகாரிகள் நிறைந்திருந்த சபையில் மற்றவர்கள் யாரும் சிந்தித்துக்கூட பார்த்திருக்க முடியாத கருத்துக்களை ஒரு முறை என்னால் முன்வைக்க முடிந்தது. காரணம் அவர்களில் யாரும் தமிழர்களாக இருக்கவில்லை. சீனர்களையும் மற்ற இனத்தவர்களையும் முழுக்க முழுக்கக் கொண்ட அரங்கில் கண்ணதாசன் மற்றும் வைரமுத்து போன்றவர்களின் கவிதை வரிகளைக்கூறி அவர்களையெல்லாம் என்னால் ஈர்க்க முடிந்தது” என்றும் பலத்த கரவொலிக்கிடையில் கூறினார்.

தொடர்ந்து முத்து நெடுமாறன் மாணவர்களிடையே, செல்பேசி இயங்குதளங்களில் தமிழ் மொழியில் தான் சாதித்த சில நவீன புதுமைகளை செயல் வடிவில் காட்டினார். மாணவர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கும் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

மாணவர்களின் கேள்விகள் தொழில் நுட்பம் குறித்தவையாக இருந்தன என்பதுடன், முத்து நெடுமாறனின் தொழில் மற்றும் தமிழ் அனுபவத்தையும் ஆர்வத்தையும் அறிந்து கொள்ளும் அடிப்படையைக் கொண்டிருந்தன.

அழகிய பாண்டியன் உரைDSC04482

இந்த நிகழ்வில் உரையாற்றிய மற்றொரு பேச்சாளரான சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிக்கையின் துணை ஆசிரியர் அழகிய பாண்டியன் (படம்: வலது) சிங்கை வானொலி பண்பலை ஒளி 96.8இன் தலைவராகப் பணியாற்றியபோது பெற்ற அனுபவங்களை மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

அவரது உருவாக்கத்தில் மலர்ந்த வானம் வசப்படுமே என்ற வானொலி நிகழ்ச்சி சிங்கப்பூர் ரசிகர்களுக்கு மத்தியிலும், இணையம் மூலமாக சிங்கை வானொலியைச் செவிமெடுக்கும் உலகளாவிய ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தவர்கள்

DSC04445இந்த நிகழ்வில் டாக்டர் என். ஜி. பி. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பெ.இரா. முத்துசாமி மற்றும் டாக்டர் என். ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் பொற்குமரன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி, முதன்மைச் செயல் அலுவலர்  முனைவர் ஓ. டி. புவனேஸ்வரன்தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கி. மணிகண்டன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.